தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை: பொது சுகாதாரத் துறை உத்தரவு

DIN

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை முதல் (ஜூலை 16) தடைவிதித்து பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் காகிதக் கோப்பைகளுக்கும், தட்டுகளுக்கும்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் 
க.குழந்தைசாமி பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 2019 -ஆம் ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறையின் அங்கமான பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் தடை?: அதன்படி, பொது சுகாதாரத் துறை அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத் துறையின்கீழ் மேம்படுத்தப்பட்ட 422 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 320 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இதுதொடர்பாக பிறக்கப்பிட்டுள்ளஉத்தரவின் விவரம்:
எதற்கெல்லாம் தடை?: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை அலுவலகக் கூட்டங்களிலும், பிற நேரங்களிலும் பயன்படுத்துவதை பணியாளர்கள் முழுமையாகத் தவிர்க்க வேண்டும். மதிய உணவினை ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், தாள்கள், தட்டுகள், குவளைகள், பாலிஸ்டெரின் ஃபோம் மூலம் தயாரிக்கப்பட்ட சேமிப்புக் கலன்கள், பிளாஸ்டிக் கைப்பைகள் ஆகியவற்றில் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் கரண்டி, உறிஞ்சுக் குழல், கொள்கலன்கள் போன்றவற்றையும் அலுவலகத்தின் உள்ளே பயன்படுத்தக் கூடாது. 
காகிதக் கோப்பைகள்: அனைத்துப் பணியாளர்களும் தங்களது தினசரி தேவைகளுக்காக பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மரங்களைப் பாதுகாக்கும் வகையில் காகிதக் கோப்பைகள், தட்டுகள் ஆகியவற்றையும் பயன்படுத்தக் கூடாது. காகிதக் கோப்பைகளிலும், தட்டுகளிலும் உள்ள மெழுகு மற்றும் பிளாஸ்டிக் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
மாற்று ஏற்பாடுகள்: பொது சுகாதாரத் துறைக்குட்பட்ட அனைத்து அலுவலகங்களின் பயன்பாட்டுக்குத் தேவையான கோப்பைகள், ஃபிளாஸ்குகள், தட்டுகள், கோப்பைகள் ஆகியவற்றை விதிமுறைகளின்படி கொள்முதல் செய்து முறையாகப் பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருள்கள் மற்றும் குடிநீர் எடுத்துவர துருப்பிடிக்காத எஃகு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) பாத்திரங்கள், வாழை இலைகள், பாக்கு மட்டை த் தட்டுகள், உணவுத் தர பாட்டில்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். 
மேம்படுத்த வேண்டும்: அலுவலகக் கூட்டங்களிலும், பிற நேரங்களிலும் தேநீர் அருந்துவதற்கு எஃகு, கண்ணாடி அல்லது பீங்கான் கோப்பைகளையே பயன்படுத்த வேண்டும். அனைத்துப் பயிற்சி நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் பாத்திரம் கழுவும் வசதியை மேம்படுத்த வேண்டும். 
துணிப்பைகள், தேங்காய் நார்ப் பைகள், சணல் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மாற்று பொருள்கள் தயாரிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT