வேளாண் திட்டங்களைப் பெற கட்டாயமாகும் உழவன் செயலி! விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

வேளாண்மைத் திட்டங்களைப் பெறுவதற்கு உழவன் செயலி கட்டாயம் என்ற நிலை ஏற்படுவதால், அதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
வேளாண் திட்டங்களைப் பெற கட்டாயமாகும் உழவன் செயலி! விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

வேளாண்மைத் திட்டங்களைப் பெறுவதற்கு உழவன் செயலி கட்டாயம் என்ற நிலை ஏற்படுவதால், அதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில், விவசாயப் பணிகளுக்கு வழங்கப்படும் மானிய உரங்கள் விவசாயிகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதிப்படுத்திட கூட்டுறவு, தனியார் உர விற்பனை நிலையங்களில் பி.ஓ.எஸ். இயந்திரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் தங்களது மண்ணின் வளத்தை அறிந்து, அதற்கேற்ப பயிர் செய்யவும், உரமிடவும் மண்வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 
மேலும், விவசாயிகள் மட்டுமே வேளாண்மை நலத் திட்டங்களைப் பெறும் வகையில் உழவன் செயலி (uzhavan app) என்ற செல்லிடப்பேசி செயலியை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது. 
இந்தச் செயலியை விவசாயிகள் மட்டுமின்றி, அனைவரும் பதிவிறக்கம் செய்துக்கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர்க் காப்பீடு விவரம், உரங்கள், விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, உதவி வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் தங்களது பகுதிக்கு வருகைதரும் நாள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
விவசாயிகளுக்கு தகவல்களை மட்டுமே அளிக்கக்கூடிய இந்தச் செயலியை தற்போது அவர்கள் முழுமையாகப் பயன்பெறும் செயலியாக மாற்றிட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்கட்டமாக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை வாங்கிட விரும்பும் விவசாயிகள் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. இந்த செயலியில் பதிவு செய்வோருக்கு மாவட்டம், வட்டம் வாரியாக முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே வேளாண் இயந்திரங்கள் வாங்கிட மானியம் வழங்கப்படுமென கூறப்படுகிறது. 
இதுகுறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது: உழவன் செயலியை தமிழகத்தில் இதுவரை 1,68,821 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில், அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் 15,179 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 13,144, விழுப்புரம் 10,824, கிருஷ்ணகிரி 10,623, மதுரை 7,947, நாகப்பட்டினம் 7,925, சேலம் 7,356, திருவள்ளூர் 6,656, திண்டுக்கல் 6,217, ஈரோடு 5,983, கோவை 5,873, திருவண்ணாமலை 5,833, தேனி 5,577, திருச்சி 5,193, கடலூர் மாவட்டத்தில் 4,680 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 
நாமக்கல், புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்துக்குள் உள்ளது. அரியலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கு குறைவாகவும், சென்னையில் 355, நீலகிரியில் 497 பேர்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தச் செயலியில் உண்மையான விவசாயிகள் மட்டுமே பயனடையும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. எனவே, விவசாயிகள் இதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் பெ.ரவீந்திரன் கூறியதாவது: 
உழவன் செயலியால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவார்கள் என்பதால் இதை வரவேற்கிறோம். 
அதே நேரத்தில் இந்தச் செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது, எப்படி செயல்படுத்துவது, அதிலுள்ள விவரங்களை எவ்வாறு பெறுவது என்பது பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியவில்லை. இதுதொடர்பாக அரசு போதிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இந்தச் செயலியின் நோக்கம் முழுமையாக விவசாயிகளைச் சென்றடையும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com