இந்த நூலகத்துக்கு புத்தகங்களை வழங்க யாராவது முன்வந்தால் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்வோம்!

பொதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நூலகங்கள் இருப்பதில்லை.
இந்த நூலகத்துக்கு புத்தகங்களை வழங்க யாராவது முன்வந்தால் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்வோம்!

பொதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நூலகங்கள் இருப்பதில்லை. நூலகரும் அரசால் நியமிக்கப்படுவதில்லை. இருந்தாலும் பரவாயில்லை, நமது பள்ளி மாணவர்கள் புத்தகங்களை வாசித்து உலக நடப்புகளை அறிந்து கொள்ள வேண்டும்' என்பதற்காக திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இப்பள்ளியில் நூலகம் உருவாகி சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர், நல்லாசிரியர் விருது பெற்ற அல் அமீன் கூறியது: புத்தகம் வாசிக்கும் பழக்கம் மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. எங்களைப் போன்ற தொடக்கப் பள்ளிகளில் நூலகங்கள் கிடையாது. ஆனாலும், வாசிப்பு வழக்கத்தை தொடக்க நிலையிலேயே மாணவர், மாணவிகள் பெற வேண்டும் என்று எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் விரும்பினோம். அதற்காக புத்தகத் திருவிழா, புத்தகக் கண்காட்சி எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் நாங்கள் எங்கள் மாணவர்களை அழைத்துச் சென்று காண்பித்தோம்.

மேலும், பொது நூலகங்களைப் பயன்படுத்தவும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தோம். இருந்தாலும் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதை விட நூலகத்தை பள்ளியிலேயே உருவாக்கி விட்டால் மாணவர்கள் சிரமமின்றி நூலகத்தை பயன்படுத்துவார்களே என சில ஆசிரியர்கள் யோசனை தெரிவித்தனர். நூலகத்துக்கு தேவையான புத்தகங்களை தாங்களே வாங்கி தருவதாகவும் கூறினர்.

இதற்கு பள்ளியின் நிர்வாகி செய்யது மைதீன் சம்மதம் தெரிவித்ததுடன் அதற்கு உதவியும் செய்வதாக தெரிவித்தார். அதன்பின் ஆசிரியர்களின் பங்களிப்புடன் நூலகத்துக்கு தேவையான அலமாரிகள் செய்யப்பட்டு பல ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வாங்கப்பட்டு நூலகம் செயல்பட்டு வருகிறது. மாலை 4 முதல் 5.30 மணி வரை ஆசிரியர் ஒருவரின் மேற்பார்வையில் நூலகம் இயங்கி வருகிறது. மாணவர்கள் அவர்களாவே புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொள்வர். இன்னொரு முக்கியமான விஷயம். ஆசிரியர்கள் கண்டிப்பாக வாரத்தில் இரண்டு புதிய நூல்களை படிக்க வேண்டும் என்பதுதான். ஆசிரியர்கள் நூலகத்தில் அமர்ந்து நூல்களை வாசிக்கும் போது அதைப் பார்க்கும் மாணவர்களுக்கும் அந்தப் பழக்கம் தானாகவே வந்து விடும் என்பதற்காகத்தான் ஆசிரியர்களும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

ஆசிரியர்களின் முயற்சியால் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்த மாணவர்கள் சிலரின் பெற்றோரும் புத்தகங்களை வாங்கி அளித்து வருகின்றனர். நூலகத்துக்கு புத்தகங்களை வழங்க யாராவது முன்வந்தால் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்வோம் என்றார் அல்அமீன்.

இந்த பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு பள்ளிகள் தோறும் நூலகம் அமைந்தால் அதை விட சிறப்பான தொடக்கம் எதுவுமில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com