ஒரே நேரத்தில் தேர்தல் நல்லது: நடிகர் ரஜினிகாந்த்

மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
கீழே கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை காவல் துறையிடம் ஒப்படைத்த சிறுவன் முகமது யாசினுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து மடியில் அமர வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த்.
கீழே கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை காவல் துறையிடம் ஒப்படைத்த சிறுவன் முகமது யாசினுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து மடியில் அமர வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த்.

மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
காமராஜரின் 116-ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும்  நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்: காமராஜரைப் போல தலைசிறந்த அரசியல்வாதி மீண்டும் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பது மக்கள் மற்றும் எனது ஆசையும்கூட. தமிழகத்தில் கல்வி வளர்ச்சி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாகவே இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல்... காமராஜரின் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் தமிழருவி மணியன் என்னோடு இணைவது என்பது மகிழ்ச்சியான விஷயம். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தேர்தல் வரும் நேரத்தில் முடிவு செய்யப்படும்.
8 வழிச் சாலைத் திட்டம் வேண்டும்: பசுமை வழிச் சாலைத் திட்டங்கள் போன்று பெரிய பெரிய திட்டங்கள் வந்தால்தான் நாடு முன்னேறும். அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஒரு திட்டத்தைக் கொண்டுவரும்போது எதிர்ப்புகள் வருவது இயல்பு. இந்த எதிர்ப்புகளைப் போக்கும் வகையில், அந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்குப் போதுமான பணப் பலன்கள், மாற்று நிலம் ஆகியவற்றைக் கொடுத்து திட்டத்தை சுமுகமாக நிறைவேற்ற வேண்டும். முடிந்த அளவு விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்காத வகையில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நல்லது: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், மக்களவைக்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது நல்ல விஷயம். அதனால் நேரமும், பணமும் மிச்சமாகும். ஒவ்வொரு முறையும் தேர்தல் வந்துகொண்டே இருந்தால் தேர்தலுக்காக மக்களைச் சந்திப்பதிலேயே நேரம், காலம் எல்லாம் போய்விடும். எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் என்பது வரவேற்கத்தக்க முயற்சி. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
1 கோடி உறுப்பினர்கள் இலக்கு: முழு நேர அரசியல்வாதியாவதை நேரம்தான் முடிவு செய்யும். ரஜினி மக்கள் மன்றத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வரும் தகவல் தவறானது. இன்னும் அந்த அளவு உறுப்பினர்கள் சேரவில்லை. அந்த இலக்கை நோக்கி ரஜினி மக்கள் மன்றம் போய்க்கொண்டிருக்கிறது.
அரசு இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்: லோக் ஆயுக்த சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை வரவேற்கிறேன். ஆனால், அதை மேலும் சக்தி வாய்ந்ததாக மாற்ற வேண்டும். அதில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளை இடம்பெறச் செய்யவேண்டும். 
ஒரு அரசை விமர்சனம் செய்வது எளிது. அதைத்தான் அனைவரும் செய்து வருகின்றனர். இருந்தபோதும், தமிழக அரசு இன்னும் சிறப்பாகச் செயல்படலாம். மேலும் சிறந்த திட்டங்களைக் கொண்டு வரலாம் என்றார் ரஜினிகாந்த்.


சிறுவனின் மேற்படிப்புக்கு உதவி

ஈரோட்டைச் சேர்ந்த முகமது யாசின் வழியில் கிடந்த ரூ.50,000-ஐ எடுத்த முகமது யாசின், அதனை தனது ஆசிரியரிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் சிறுவனுடன் தொகையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தார்.
தங்கச் செயின் பரிசளிப்பு: நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் பார்க்க வேண்டும் என முகமது யாசின் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து குடும்பத்தினருடன் சென்னையில் ரஜினிகாந்த்தைச் சந்தித்தார். அப்போது சிறுவனைப் பாராட்டி, தங்கச் செயினை ரஜினிகாந்த் பரிசளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சிறிய அளவு பணத்துக்குக்கூட கொலை, கொள்ளை என நடக்கும் இந்தக் காலகட்டத்தில், இவ்வளவு பெரிய தொகையை என்னுடையது அல்ல என்ற மனப்பான்மையில் அதைப் பாதுகாப்பாக சிறுவன் ஒப்படைத்திருப்பது மிகப் பெரிய குணம். பெருமையாக உள்ளது. இந்த நல்ல பண்புடன் சிறுவனை வளர்த்த பெற்றோருக்குப் பாராட்டுகள். அரசுப் பள்ளியில் படிக்கும் அவர் அங்கேயே படிக்கட்டும். அதன் பிறகு அவர் என்ன மேற்படிப்புப் படிக்க நினைத்தாலும், எனது மகனாக நினைத்து நானே படிக்க வைப்பேன் என உறுதி அளித்திருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com