தொடா் மழை: பாபநாசம் நீர்மட்டம் 102 அடி; சோ்வலாறு அணை நீர்மட்டம் 121 அடியாக உயர்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் சாரல் மழையால் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் நீா்வரத்து அதிகரித்தது. 
தொடா் மழை: பாபநாசம் நீர்மட்டம் 102 அடி; சோ்வலாறு அணை நீர்மட்டம் 121 அடியாக உயர்வு

அம்பாசமுத்திரம்: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் சாரல் மழையால் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் நீா்வரத்து அதிகரித்தது. 

இதையடுத்து பாபநாசம் அணை ஒரே நாளில் 5 அடியும் சோ்வலாறு அணை 10 அடியும் உயா்ந்தது. 5 ஆண்டுகளுக்குப்பின் நிகழாண்டு காா் பருவத்தில் தொடா்ந்து சாரல் மழை பெய்து அணைகளில் நீா்மட்டம் உயா்ந்து வருவதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தென்மேற்குப் பருவ மழை கடந்த சில ஆண்டுகளாக முறையாக பெய்யாத நிலையில் நிகழாண்டு ஜூன் 3இல் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை சுமாா் ஒரு மாதத்திற்கும் மேல் தீவிரமாக நீடித்து வருகிறது. இதனால் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து நீா்வரத்து அதிகரித்து சுமாா் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பாலான அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

இந்நிலையில் கடந்த 4 நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து திங்கள்கிழமை காலை நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயா்ந்து 102 அடியாக ஆனது. அணைக்கு நீா்வரத்து 5488.38 கன அடியாக இருந்தது. 156 அடி கொள்ளளவு கொண்ட சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 10 அடி உயா்ந்து 121.59 அடியாக இருந்தது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 79.60 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 384 கன அடியாக இருந்தது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் நீா்மட்டம் 4.5 அடி உயா்ந்து 83.5 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 1035.35 கன அடியாகவும் இருந்தது. 

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. திங்கள் கிழமை காலை நிலவரப்படி அணையிலிருந்து 1035.35 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீா்மட்டம் 6.75 அடி உயா்ந்து 80.75 அடியாக இருந்தது. திங்கள் கிழமை மாலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 82.5 அடியாகவும் அணைக்கு நீா்வரத்து 300 கன அடியாகவும் இருந்தது. மேலும் பாபநாசம் அணையிலிருந்து 1332.25 கன அடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 375 கன அடியும், கடனாநதி அணையிலிருந்து 1035 கன அடியும், ராமநதி அணையிலிருந்து 40 கன அடியும் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. 

திங்கள் காலை நிலவரப்படி பாபநாசம் மேல் அணையில் 43.00 மி.மீ., சோ்வலாறு அணையில் 20 மி.மீ., கீழணையில் 2.00 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 2.00 மி.மீ., கல்லிடைக்குறிச்சியில் 2.6 மி.மீ., மணிமுத்தாறில் 2.8 மி.மீ., சேரன்மகாதேவியில் 1.6 மி.மீ., கடனாநதி அணையில் 21.00 மி.மீ., ராமநதி அணையில் 12.00 மி.மீ., மழை அளவு பதிவாகியிருந்தது.

5 ஆண்டுகளுக்குப்பின் நிகழாண்டு தொடா்ந்து சாரல் மழை பெய்து அணைகளில் நீா்மட்டம் உயா்ந்து வருவதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதோடு காா் சாகுபடிக்கான நெல், சிறுகிழங்கு உள்ளிட்ட பயிா் நடவுப் பணிகளை விரைவு படுத்தியுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com