நெல்லுக்கான அடிப்படை ஆதரவு விலை குறைவு: விவசாயிகள் அதிருப்தி

மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான அடிப்படை ஆதரவு விலை மிகவும் குறைவு என்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
நெல்லுக்கான அடிப்படை ஆதரவு விலை குறைவு: விவசாயிகள் அதிருப்தி

சிதம்பரம்: மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான அடிப்படை ஆதரவு விலை மிகவும் குறைவு என்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்தது. இதில், வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தீர்மானிப்பதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு வரையறுத்த கோட்பாடு பின்பற்றப்பட்டதாக கடந்த 8-ஆம் தேதி வெளியான மத்திய அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
2004-ஆம் ஆண்டில் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான வேளாண்மை ஆணையமானது, உற்பத்திச் செலவுக்கு மேல் 50 சதவீத அளவு லாபம் சேர்த்து, அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்பட வேண்டும் எனக் கூறியது.
எந்தத் தொழிற்சாலை உற்பத்திப் பொருளுக்கும் உற்பத்திச் செலவைவிட 3 மடங்கு தொகைக்கு (300 சதவீதம்) குறைவாக விற்பனை விலை தீர்மானிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் எம்.எஸ். சுவாமிநாதன் குழு 50 சதவீதம் சேர்த்து வழங்க வேண்டும் என்று வரையறுத்தது. இந்தக் கணக்கீட்டின்படி கூட நெல், சோளம், கம்பு, நிலக்கடலை, பருத்தி போன்றவற்றுக்கு அடிப்படை விலை அமையவில்லை.
இந்த நிலையில், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி ஆதார விலைகள் அறிவிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுவது தவறு என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதற்கு சுவாமிநாதன் குழு ஒரு வரையறையைக் கூறுகிறது. இ2+ 50% என்பதே அது. இங்கு இ2 என்பது இந்தியா முழுமைக்குமான சராசரி உற்பத்திச் செலவைக் குறிக்கிறது.
இதுவே அறிவியலுக்குப் புறம்பானது என்ற கருத்து நிலவுகிறது. ஏனெனில், உற்பத்திச் செலவானது ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுகிறது. ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே கூட, பாசன வாய்ப்புக்கு ஏற்ப உற்பத்திச் செலவு மாறுபடும். ஒரு கணக்கீட்டு வசதிக்காக வேண்டுமானால் ஒரு மாநில சராசரியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்தியா முழுவதற்கும் சராசரி என்பது பொருத்தமில்லாதது.
இவ்வாறு கணக்கிடப்படும் இ2 என்ற சராசரி உற்பத்திச் செலவானது, அ2+ஊக+த என்ற வாய்ப்பாட்டின் மூலம் பெறப்படுகிறது. இதில் அ2 என்பது விதை, உரம், பூச்சிகொல்லி, நீர்ப் பாசனம், தொழிலாளர் ஊதியம் போன்ற இடுபொருள் செலவைக் குறிக்கிறது. ஊக என்பது உழவரது குடும்பத்தினரின் உழைப்புக்கான ஊதிய அளவைக் குறிக்கிறது. த என்பது குத்தகை நிலமாக இருந்தால் அதற்கான வாடகைக் கணக்கீடு, சொந்த நிலமாக இருந்தால் அதில் செலுத்தப்படும் நிலை மூலதனத்துக்கான வட்டி ஆகியவற்றைக் குறிக்கும். நிலத்தின் வளத் தேய்மானமும் இந்த கணக்கீட்டில் வரும். இவை அனைத்தின் கூட்டுத் தொகையே மொத்த உற்பத்திச் செலவு (இ2) ஆகும். இந்தச் செலவோடு 50 சதவீதம் லாபத் தொகை சேர்த்து கணக்கிடுவதே எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைக்கும் அடிப்படை விலையாகும்.
இதுகுறித்து தமிழ்த் தேசிய பேரியக்க பொதுச் செயலர் கி.வெங்கட்ராமன் தெரிவித்ததாவது:
மத்திய அரசு மேலே குறிப்பிட்ட த-ஐ நீக்கிவிட்டு அ2+ஊக என்பதை மட்டும் உற்பத்திச் செலவாகக் கருத்தில்கொண்டு, அதற்கு மேல் 50 சதவீதம் சேர்த்து அடிப்படை விலையை அறிவித்துள்ளதாகக் கூறுகிறது. அதேநேரம், எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விலை அறிவித்துள்ளதாகவும் கூறிக் கொள்கிறது. இது முரண்பாடானதாகும். 
உண்மையில் இந்தக் கணக்கீட்டின்படியாவது வேளாண் விளைபொருள்களுக்கு அடிப்படை விலை அறிவிக்கப்பட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை.
உதாரணமாக, நெல்லுக்கு 2018 -19-ஆம் ஆண்டுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள அடிப்படை விலை குவிண்டாலுக்கு ரூ.1,750 ஆகும்.
நல்ல பாசன வசதியுள்ள நிலத்தில் நெல் சாகுபடி செய்ய ஆகும் உற்பத்திச் செலவு (அ2) மட்டும் ஏக்கருக்கு சராசரியாக 31,700 ரூபாய் ஆகும். எந்த இயற்கைச் சீற்ற பாதிப்பும் இல்லாது போனால், ஒரு ஏக்கருக்கு 18 குவிண்டால் நெல் அறுவடை கிடைக்கும். இந்த வகையில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்திக்கு ஆகும் இடுபொருள் செலவு (அ2) மட்டும் 1,760 ரூபாய். அ2+50% என்று கணக்கிட்டாலே - 1,760 + 880 = 2,640 ரூபாய் ஆகும்.
ஆனால், (அ2+ஊக)+50% அளிப்பதாகக் கூறி 1,750 ரூபாயை அடிப்படை விலையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மிகவும் குறைவு. எனவே, வேளாண் விளை பொருள்களுக்கு உரிய லாப விலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.
- ஜி. சுந்தரராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com