போதிய நீரின்றி நெற்பயிர்கள் நாசம்

பூதூர், ஈசூர் உள்ளிட்ட பகுதிகளில் போதிய நீரின்றி, பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி நாசம் அடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
போதிய நீரின்றி நெற்பயிர்கள் நாசம்

பூதூர், ஈசூர் உள்ளிட்ட பகுதிகளில் போதிய நீரின்றி, பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி நாசம் அடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்று நீரையும், அப்பகுதி ஏரி நீரையும் நம்பி மதுராந்தகத்தை அடுத்த ஈசூர், பூதூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை செய்து வருகின்றனர். எந்த நாளும் தண்ணீர் கிடைக்கும் வகையில் பாலாற்றில் அரசு தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 ஈசூர், பூதூர் உள்ளிட்ட கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பாலாறு நிலத்தடி நீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கை பாலாற்றில் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும் என்பதுதான். எனினும், அரசு இதற்கு முன்வராததால், பாலாற்றை நம்பி விவசாயம் செய்து வந்த விவசாயிகள் தற்போது 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிட்டுள்ளனர். அப்பயிர்கள் நீரின்றி முற்றிலும் கருகி நாசமாகியுள்ளன.
 இதனால் இப்பகுதி விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பாலாற்றின் அருகே ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீரைக் கொண்டு வந்து, விவசாயம் செய்து வந்த விவசாயிகள், அந்தக் கிணறுகளில் தண்ணீர் இல்லாததாலும், அப்பகுதி ஏரிகளை தூர் வாராததாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இந்தச் சூழ்நிலையில் தண்ணீர் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனர். இதுபற்றி மதுராந்தகம் பகுதி வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த அதிகாரிகளும் நேரில் வந்து காய்ந்து கருகிப் போன நெற்பயிர்களைப் பார்க்கவில்லை. வங்கியிலும், தனி நபர்களிடமும் கடன் வாங்கி பயிர் வைத்த விவசாயிகளின் நிலையை அரசு அதிகாரிகள் நேரில் பார்த்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com