புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்!

தருமபுரி மாவட்டம் பொ.துறிஞ்சிப்பட்டி, பொ.பள்ளிப்பட்டி பகுதிகளில் பல்வேறு தொல்லியல் பொக்கிஷங்களான நடுகற்கள்,
ஜங்காளஅள்ளியில் தோட்டத்தில் காணப்படும் நடுகல்.
ஜங்காளஅள்ளியில் தோட்டத்தில் காணப்படும் நடுகல்.

தருமபுரி மாவட்டம் பொ.துறிஞ்சிப்பட்டி, பொ.பள்ளிப்பட்டி பகுதிகளில் பல்வேறு தொல்லியல் பொக்கிஷங்களான நடுகற்கள், கவனிப்பாரற்று புதர்களில் கிடந்து சீரழிந்து வருகின்றன. தொல்லியல் துறையினர் இவற்றை பாதுகாத்து படியெடுத்து வரலாற்றைப் பதிவு செய்திட வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் நிரம்பிக் கிடக்கும் மாவட்டங்களாகும். ஆனால், இதர மாவட்டங்களைப் போலவே இவ்விரு மாவட்டங்களும் தொல்லியல் துறையால் கவனிக்கப்பட்டு வருவது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள் ஏற்கெனவே கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வயல்களிலும், முள்புதர்களிலும் ஏராளமான நடுகற்கள் பொ.துறிஞ்சிப்பட்டி, பொ.பள்ளிப்பட்டி பகுதிகளில் காணப்படுகின்றன. கவனிப்பாரற்றுக் கிடக்கும் அவை, காலப்போக்கில் உடைந்தும், படியெடுத்துப் படிக்க இயலாத நிலைக்கும் தள்ளப்பட்டு வருகின்றன.

பொ.துறிஞ்சிப்பட்டியிலிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் ஒட்டுப்பள்ளம் முனியப்பன் கோயில் பகுதியில் பெரும் புளிய மரத்துக்குக் கீழே மூன்று நடுகற்கள் முள்புதர்களுக்குள் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று சரிபாதியாக உடைந்தும்விட்டது. மற்ற இரண்டும்கூட ஏறத்தாழ அழிந்து வரும் நிலையில் உள்ளன.

ஒன்றில் கன்னட எழுத்துகள் இரு வரிகளாக உள்ளன. அதற்குக் கீழே ஒரு கையில் கட்டாரியுடன் வீரன் செதுக்கப்பட்டுள்ளார். மற்றொரு நடுகல்லில் நவகண்டம்' என்றழைக்கப்படும் தலையை வெட்டும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் வரலாற்றை எங்களுக்கு அறியச் செய்ய வேண்டியது தொல்லியல் துறையின் கடமை' என்கிறார் அப் பகுதியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் அருண்குமார்.

ஜங்காளஅள்ளி கிராமத்திலுள்ள அவரது வீட்டின் அருகேயுள்ள தோட்டத்திலும் ஒரு நடுகல் உள்ளது. அந்த நடுகல், கையில் பாதுகாப்புக்காக கட்டாரி ஒன்றை வைத்திருக்கும் வணிகர் ஒருவர் மற்றொரு கையில் இலையொன்றை எடுத்து வருவதாக அறிய முடிகிறது. அதே கல்லில் கால்நடைகளும் இருப்பதால், அவர் வணிகராக இருக்கலாம் எனக் கருதலாம் என்கிறார் அருண்குமார்.

பொ.துறிஞ்சிப்பட்டி அருகே சாலைவளசு பகுதியில் யானை வீரன் ஒருவன் இன்னொருவரின் கழுத்தை வெட்டுதலைப் போன்று செதுக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 4 அடி உயரமுள்ள நடுகல் இது.

இதுபோல வயல்வெளிகளிலும் புதர்களிலும் ஏராளமான நடுகற்கள் கேட்பாரின்றிக் கிடக்கின்றன. அவை விரைவில் அழிந்துவிடும் அபாயமும் இருக்கிறது. 

அதற்கு முன்பாக, அவற்றை நேரில் ஆய்வு செய்து, படியெடுத்து, அருகேயுள்ள அவற்றின் தொடர்ச்சியையும் சேர்த்து ஆய்வு செய்து பொம்மிடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியின் வரலாற்றை மக்கள் அறியும் வகையில் செய்ய தொல்லியல் துறையினர் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கூடவே, அவற்றை எடுத்து வந்து பாதுகாக்கவும் உரிய நடவடிக்கையை தொல்லியல் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒட்டுப்பள்ளம் முனியப்பன் கோயில் அருகே முள்புதர்களுக்கு நடுவே கிடக்கும் நடுகற்கள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com