புதன்கிழமை 12 டிசம்பர் 2018

148 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு படியெடுப்பு

By  வாழப்பாடி,| DIN | Published: 19th June 2018 09:43 AM
வாழப்பாடி சென்றாயப் பெருமாள் கோயிலில் பதித்து வைத்து பாதுகாக்கப்பட்டு வரும் 148 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு.

வாழப்பாடி சென்றாயப் பெருமாள் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் 148 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டை படியெடுத்து, சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கள ஆய்வு செய்தனர்.

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கவிஞர் பெரியார்மன்னன், மருத்துவர் பொன்னம்பலம், ஆசிரியர் பெருமாள், ஜீவநாரயணன் உள்ளிட்டோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மையத்தினர் கூறியது:-

20 வரிகள் கொண்ட கல்வெட்டின் மேற்பகுதியில் சக்கரம், சங்கு, நாமம் ஆகியன செதுக்கப்பட்டுள்ளன. கலியுகம் 4971 சாலிவாகன வருடம் (1792) வைகாசி 13-ஆம் தேதி என கல்வெட்டு தொடங்குறது. இது தற்போதைய கணக்கில், கி.பி. 1870-ஆம் ஆண்டு ஆகும்.

தவசி வன்னியன் மகன் தொப்ளான், வன்னியன் மனைவி அலமேலு ஆகியோரின் பெரு முயற்சியால், அங்கமுத்து வன்னியன் என்பவர், தான் சேர்த்து வைத்திருந்த செல்வத்தாலும், உடல் வலிமையாலும் வாழப்பாடி அக்ரஹாரத்தில் சென்றாயப் பெருமாள் கோயிலில் கர்ப்பகிரகம் அமைத்து திருப்பணி செய்துள்ளார். கோயிலுக்கு ஒரு நந்தவனம் அமைத்து கிணறும் வெட்டி கொடுத்துள்ளார். கோயில் வாகனங்களையும் புதுப்பித்துக் கொடுத்துள்ளார்.

திருப்பதியிலிருந்து சென்றாயப் பெருமாள், அலமேலு திரு உருவச் சிலையை செய்து கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார். பூசைக்காக நஞ்சை, புஞ்சை நிலங்களைத் தானமாக அளித்து, தேரும் செய்து கொடுத்துள்ளார். கோயிலின் வெளியே கட்டப்பட்டுள்ள கடைகளின் வாடகையிலிருந்து ரூ.500 எடுத்து ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பௌர்ணமி நாளில், தேர்த் திருவிழா நடத்தப்பட வேண்டும்ய இந்த தர்மத்தை அனைவரும் மதித்து தொடர்ச்சியாகச் செயல்படுத்த வேண்டும். இந்த தர்மத்துக்கு யாராவது இடையூறு செய்தால் அவர்கள் இந்த ப்பிறவியிலே மதி இழந்து ஏழேழு நரகத்துக்கு செல்வார்கள் என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.

தவசி வன்னியன் என்பவர் இந்தக் கல்வெட்டை எழுதியுள்ளார். கோயிலை, அங்கமுத்து வன்னியர் சந்ததியர் தொடர்ந்து பராமரித்து, திருவிழாக்களை நடத்தி வருகின்றனர் என்றனர்.

More from the section

நடிகர் ரஜினிக்கு சு.திருநாவுக்கரசர், தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்து
நடிகர் ரஜினிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து 
5 மாநில தேர்தல் முடிவுகளை யாருக்கும் பின்னடைவாக கருதவில்லை: கிரண்பேடி
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்: ரஜினிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து
திருநெல்வேலி - சென்னைக்கு டிச. 25இல் சிறப்பு ரயில் இயக்கம்