காவிரி விவகாரம் குறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: துரைமுருகனுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் பதில்

காவிரி விவகாரம் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனுக்கு, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன்   பதில் அளித்துள்ளார
காவிரி விவகாரம் குறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: துரைமுருகனுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் பதில்

சென்னை:  காவிரி விவகாரம் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனுக்கு, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன்   பதில் அளித்துள்ளார்.

காவிரி விவகாரம் குறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சவால் விடுத்து இருந்தார். இது தொடர்பாக  செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்தாவது:

காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்குத் திமுக துரோகம் செய்து விட்டது என்று நாகப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். பொதுப்பணித்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர், ஒன்று காவிரி தொடர்புடைய கோப்புகளைப் படிக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுப்பணித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகளைப் படிக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் மு.க.ஸ்டாலினும் நானும் காவிரிப் பிரச்னையில் திமுகவின் சாதனைகள் பற்றி சட்டப்பேரவையில் பேசியதையாவது காது கொடுத்துக் கேட்டிருக்க வேண்டும். இதில் எதையுமே செய்யாமல் ஒரு முதல்வர் இப்படிப் பேசிக் கொண்டிருப்பது உள்ளபடியே தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள அவமானம்.

காவிரிப் பிரச்னையில் முதலில் பேச்சுவார்த்தையைத் துவக்கியது, நடுவர் மன்றத்துக்கு முதலில் கோரிக்கை வைத்தது, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது, நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத் தீர்ப்பு பெற நடுவர் மன்றத்துக்கு உச்சநீதிமன்றத்தில் அதிகாரம் பெற்றது, இடைக்காலத் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டு அதன்படி காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, அதிமுக அரசு முடக்கி வைத்திருந்த காவிரி வழக்கு இறுதி விசாரணையை முடித்து இறுதித் தீர்ப்பு பெற்றது என அனைத்துமே கருணாநிதியின் ஆட்சியில்தான் என்பதை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்.

காவிரி இறுதித் தீர்ப்பு ஏன் அரசிதழில் உடனடியாக வெளியிடப்படவில்லை என்பதற்கு அதிமுக அரசின் சார்பில் சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே விளக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் நடுவர் மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் இறுதித் தீர்ப்பின் மீது விளக்கம் கேட்டு வழக்குத் தொடுத்திருப்பதால் அரசிதழில் வெளியிட முடியவில்லை என்பது விளக்கப்பட்டுள்ளது.

எனவே, காவிரிப் பிரச்னையில் சாதித்தது திமுகவா அல்லது அதிமுகவா என்று விவாதம் நடத்த விரும்பினால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஒரே மேடையில் காவிரி பற்றி விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாரா?.

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனுக்கு, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன்   ஓ.எஸ். மணியன் பதில் அளித்துள்ளார்.

தலைமைச் செயலக வளாகத்தில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

காவிரி விவகாரம் குறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சவால் விடுத்து இருந்தார். அவருடன் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அது அவர் கூட்டும் மேடையாக இருந்தாலும்சரி..அல்லது நான் கூட ஏற்பாடு செய்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com