திருவள்ளூர் அருகே அகழ்வாராய்ச்சியில் 351 பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் கடந்த 20 நாள்களாக நடந்து வந்த 2-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் 351 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்
திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் க.பாண்டியராஜன்.
திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் க.பாண்டியராஜன்.

பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் கடந்த 20 நாள்களாக நடந்து வந்த 2-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் 351 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். 
திருவள்ளூர் அருகே பட்டரை பெரும்புதூரில் தொல்பொருள் துறை சார்பில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த 20 நாள்களாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்களைப் பார்வையிட்டு, அது தொடர்பான விளக்கத்தையும் கேட்டறிந்தனர். 
பின்னர் இது குறித்து அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டரைபெரும்புதூர், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இக்குறிப்பிட்ட இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வு நிகழ்வுகள் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளன. 
இதில், நேச்சர்' என்கிற சர்வதேச அளவிலான பத்திரிகையில் முதல் மனிதன் வாழ்ந்திருந்த இடம் தமிழகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அகரம்பாக்கம் பகுதியில்தான் முதல் மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்பது விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இதன் அடிப்படையில், தமிழக அரசு சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் அகழாய்வுப் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. இதுவரையில் இந்த ஆய்வின் மூலம் 351 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் மனித எலும்புத் துண்டுகள், கல்லாயுதங்கள், செம்பு, இரும்பு ஆகிய உலோகங்கள் கண்ணாடிப் பொருள்கள், சங்கு சார்ந்த வளையல்கள், பவள மணிகள், பச்சை மணிகள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன. 
சில பானை ஓடுகளில் பிராமி எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளிலேயே அகழாய்வு நடைபெறுகிறது. அந்த வகையில் பட்டரைபெரும்புதூர் பகுதியில் 11 குழிகளில் அகழாய்வுப் பணிகள் 2 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளன. 
இதற்கு முன்னர் 2016-ஆம் ஆண்டில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்த நிலையில், தற்போது 2-ஆம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இதுவரையில், கார்பன் டேட்டிங் முறையில்தான் பழங்காலப் பொருள்களின் தொன்மை குறித்து அறிந்து கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது ஒளிர்வு (ஃப்ளாரசென்ஸ்) சார்ந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை எனவும் கண்டயறியப்பட்டுள்ளது. 
இது மனித வரலாற்றில் மிக முக்கியமாகக் கருதப்படக் காரணம், பல ஆராய்ச்சியாளர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் மனிதர்கள் முதலில் தோன்றினர் என்ற நம்பிக்கையை இது முற்றிலும் தகர்த்துள்ளது. 
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி' என்பதற்கு தொல்லியல் சான்று முதன் முதலாக கிடைத்துள்ளது. வரலாற்று ரீதியாக இச்சான்றுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. மேலும், பட்டரைபெரும்புதூரில் பல கோயில் சார்ந்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் காலத்திய கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பழங்குடியினர் மற்றும் இருளர் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இவர்களின் வாழ்க்கை முறை ஆய்வுக்குள்படுத்தப்பட்டு, கல்வெட்டுகளுடன் ஒப்பிட்டு இந்த இடத்தின் தொன்மை வரலாற்றை உலகறியச் செய்வோம். 
இந்த மாவட்டத்தில் திருவாலங்காடு, திருவேற்காடு ஆகிய பகுதிகள் மிகவும் புகழ் பெற்றவை. அந்த வரிசையில் பட்டரைபெரும்புதூர், அகரம்பாக்கம் ஆகிய பகுதிகளும் அமையும். மேலும், மாநில அரசு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதற்காக திட்டம் வகுத்து செயல்படுத்தவுள்ளது என அவர் தெரிவித்தார். 
இந்த ஆய்வின் போது தொல்லியல்துறை ஆணையர் நாகராஜ், அகழாய்வு இயக்குநர் (பட்டரைபெரும்புதூர் அகழாய்வு) ஜெ.பாஸ்கர், கோட்டாட்சியர் கெ.ரா.திவ்யஸ்ரீ, வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்
அகழ்வாராய்ச்சி பணிகளைப் பார்வையிட்ட பின்னர், 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கு குறித்து அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் இரு வேறு வகையான தீர்ப்புகளை வழங்கினர். 
இந்நிலையில், 3-ஆவது நீதிபதி வழங்கக் கூடிய தீர்ப்பின் அடிப்படையிலேயே, இப்போதுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மேலும் டி.டி.வி. தினகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவற்றின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. அதன் அடிப்படையில் ஆர்.கே.நகரில் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். மீண்டும் இடைத்தேர்தல் வரும். அப்போது அங்கு கட்டாயம் அதிமுக வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com