சென்னையில் மட்டும் 1.20 லட்சம் நாய்கள்! பெருகிவரும் தெரு நாய்களால் அச்சத்தில் பொதுமக்கள்

சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகி வருகின்றனர்
சென்னையில் மட்டும் 1.20 லட்சம் நாய்கள்! பெருகிவரும் தெரு நாய்களால் அச்சத்தில் பொதுமக்கள்

சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகி வருகின்றனர். சென்னை மாநகரில் சுமார் 1.20 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக பொதுநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 நன்றியுடைய பிராணிகளில் நாய்களுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. நாய்களை வளர்ப்போர் தங்கள் வீட்டில் ஒரு உறவாகவே நினைத்து நாய்களை வளர்க்கின்றனர். ஆனால் ஆதரவற்ற நிலையில் திரியும் தெரு நாய்கள் பெருகி வரும் நிலையில், அவை மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பவையாக மாறி வருகின்றன.
 முன்பு தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவை கொல்லப்பட்டன. இந்நிலையில், பிராணிகள் நல அமைப்புகள் மேற்கொண்ட தொடர் முயற்சி காரணமாக நாய்களைக் கொல்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இனப்பெருக்கத் தடுப்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.
 இருப்பினும் தெரு நாய்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் திரும்பிய பக்கமெல்லாம் அவற்றின் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துகளைச் சந்திக்கின்றனர். நாய்க்கடியால் பாதிக்கப்படும் சிலர் மருத்துவமனைக்குச் சென்று ரேபிஸ் தடுப்பூசி போடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
 தெருநாய்களின் எண்ணிக்கை குறித்து கடந்த 2014-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னை மாநகரம் முழுவதும் சுமார் 84 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது இவற்றின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 1.20 லட்சத்தை எட்டியிருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் இனப்பெருக்கத் தடுப்பு அறுவைச் சிகிச்சைகள் தெரு நாய்களுக்கு போதுமான அளவில் செய்யப்படவில்லை. ஒரு தெருநாய்க்கு அறுவை சிகிச்சை செய்யாவிடில் அது அடுத்த ஆண்டில் 6 குட்டிகளைப் போடும் நிலை உள்ளது.
 இதுகுறித்து திருவொற்றியூர் நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி ஆகியோர் கூறியது:
 தெருநாய்களின் எண்ணிக்கை சமீபகாலமாகத் தொடர்ந்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் கூறும் கணக்கெடுப்பு கூட ஒருவகையில் கண்துடைப்பாகவே உள்ளது. தெரு நாய்களால் ஆபத்து இல்லை என பிராணிகள் நல ஆர்வலர்களும், அதிகாரிகளும் தொடர்ந்து கூறுகின்றனர். ஆனால் அவை பாதசாரிகளை கடிப்பதும், சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன விபத்துகள் ஏற்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றனர்.
 வெறிநாய்கள் இல்லை: இதுகுறித்து சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவர் மகேந்திரன் கூறியது:
 தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பொதுவாக தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை. இருப்பினும் இதன் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக இனப்பெருக்க அறுவைச்சிகிச்சைகள் அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் புளூகிராஸ், எஸ்பிசிஏ ஆகிய பிராணிகள் நல தன்னார்வ நிறுவனங்கள் தீவிரமாக உதவி வருகின்றன. மாநகராட்சி சார்பில் பிடித்து வரப்படும் நாய்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு அவை ஏற்கெனவே சுற்றித்திரிந்த பகுதிகளிலேயே திரும்பவும் விடப்படுகின்றன.
 அறுவைச் சிகிச்சையை அடுத்து சுமார் 10 நாள்கள் தொடர் சிகிச்சை அளிக்கிறோம். சமீப காலமாக வெறிநாய்கள் ஏதும் சென்னையில் இல்லை. வெறிநாய் கடியால் சமீபத்தில் யாரும் சென்னையில் இறக்கவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com