சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை

சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பசுமை பட்டாசு தொடர்பாக நீதிமன்றத்தையே நாட இருப்பதாக தெரிவித்தார்.
சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை

சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பசுமை பட்டாசு தொடர்பாக நீதிமன்றத்தையே நாட இருப்பதாக தெரிவித்தார். 

பட்டாசுத் தொழிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரச்னை வந்து கொண்டிருக்கிறது. புதுதில்லியில் ஏற்பட்ட காற்று மாசுக்கு பட்டாசுதான் காரணம் எனக்கூறி கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன் நீதிமன்றம் அங்கு பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடைவிதித்தது. தீபாவளி முடிந்த பின்னர் 1.11.2017 முதல் புதுதில்லியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டும் உச்ச நீதிமன்றம், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்ததால், நிகழாண்டு பட்டாசு விற்பனையும் பெருமளவு பாதிக்கப்பட்டது. பட்டாசு உற்பத்திக்கு முக்கிய மூல பொருளான பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் உற்பத்தி தொடங்குவது வழக்கம். ஆனால், மூலப் பொருள் தடை காரணமாக, கம்பி மத்தாப்பு, பென்சில், சக்கரம், பூச்சட்டி போன்ற பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் 60 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வாலா போன்ற வெடிகள் தயாரிக்க முடியாமல் 20 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், 80 சதவீத வெடிகளை தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவகாசியில் இன்று பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு பின்பு அதன் செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்ற உத்தரவால் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று பட்டாசு விற்பனை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் சுமார் 60 சதவீதம் பட்டாசுகள் விற்காமல் தேங்கியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் விருதுநகர் - சிவகாசியில் 1,200 பட்டாசு ஆலைகள் இன்று (திங்கள்கிழமை) முதல் காலவரையின்றி மூட உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. 

நீதிமன்றம் கூறுவது போல பசுமை பட்டாசு என்ற ஒன்று இல்லை. பட்டாசுகளில் பசுமை பட்டாசு என்பது சாத்தியம் இல்லாத செயல். 

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் வரை பட்டாசு ஆலைகள் மூடப்படும் என தமிழக அரசுக்கு  கடிதம் எழுதியுள்ள சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், வெளிநாடுகளில் எந்த நாட்டிலும் பட்டாசுக்கு தடை இல்லை. வெளிநாடுகளில் பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்தியாவிலும் பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விதிவிலக்கு அளித்தால் மட்டுமே இந்தத் தொழில் பாதுக்கப்படும்" என தெரிவித்தார். 

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில், "உச்ச நீதிமன்றம் தெரிவித்த பசுமை பட்டாசு தொடர்பாக அறிய நீதிமன்றத்தையே நாட முடிவு செய்துள்ளதாக" அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com