பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட ரூ. 41.70 கோடி ஒதுக்கீடு: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலத்தில் பாயும் பாலாற்றின் குறுக்கே மேலும் தடுப்பணைகள் கட்ட 41.70 கோடி ரூபாயை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட ரூ. 41.70 கோடி ஒதுக்கீடு: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலத்தில் பாயும் பாலாற்றின் குறுக்கே மேலும் தடுப்பணைகள் கட்ட 41.70 கோடி ரூபாயை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 வட தமிழகத்தின் வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரம் தரக்கூடிய பாலாறு, கர்நாடகா மாநிலம், நந்தி துர்கம் மலைப் பகுதியில் உற்பத்தி ஆகிறது. பின்னர், ஆந்திர மாநிலம், குப்பம் வழியாக சுமார் 36 கி.மீ. பயணித்து, தமிழகத்தின் புல்லூர் ஊராட்சியில் தொடங்கி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், காஞ்சிபுரம் வழியாக சுமார் 222 கி.மீ. தூரம் பயணித்து, கடைசியாக சதுரங்கப்பட்டினம் அருகில் வாயிலூர் பகுதியில் வங்கக் கடலில் கலக்கிறது. இப்பாலாற்று நீரை நம்பி தமிழகத்தில் மட்டும் 2.50 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. தூரம் பாயும் பாலாற்றின் குறுக்கே அந்த அரசு கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை சுமார் 22 இடங்களில் தடுப்பணைகளை கட்டியது. மேலும், 5 அடியாக இருந்த தடுப்பணைகளின் உயரத்தை, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 12 அடி முதல் 20 அடி வரை உயர்த்திக் கட்டியது. இதனால் பாலாற்றில் வந்துகொண்டிருந்த தண்ணீர் முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது. மேலும் பாலாற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டாலும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் பாலாற்றின் குறுக்கே 21 தடுப்பணைகளை கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குப்பம் தொகுதியில் உள்ள குப்பம், வீ கோட்டா, சாந்திபுரம், ராம்குப்பம் ஆகிய 4 மண்டலங்களுக்கு இடையே செல்லக்கூடிய பாலாற்றின் மீது 21 தடுப்பணைகள் கட்ட அம்மாநில நீர்ப் பாசனத் துறை சார்பில், ரூ. 41.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் அணைகள் கட்டுவது மட்டுமின்றி, ஏற்கெனவே உள்ள தடுப்பணைகளை பலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வட தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படுவதுடன், விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
 எனவே, பாலாற்றின் குறுக்கே மேலும் 21 தடுப்பணைகள் கட்டும் முடிவை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 ஆந்திர மாநில அரசின் நடவடிக்கை குறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில பொதுச் செயலாளர் ஏ.சி.வெங்கடேசன் கூறியதாவது: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு மேலும் தடுப்பணை கட்ட எடுக்கப்பட்ட முடிவு பாலாற்றுப் படுகைவாழ் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவோ, ஏற்கெனவே உள்ள தடுப்பணையை உயர்த்திக் கட்டவோ கூடாது என தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. பாலாற்று விஷயத்தில் தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. 1892-ஆம் ஆண்டு மைசூர் மகாணத்துக்கும், சென்னை மகாணத்துக்கும் ஏற்பட்டுள்ள பல்வேறு நதி ஒப்பந்தங்களில் 8-ஆவது அட்டவணையில் பாலாறு ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஆந்திர அரசு தொடர்ந்து மீறி வருகிறது. இதனால் பாலாற்றில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழக பாலாற்றில் வராத நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு இது தொடர்பாக மேலும் ஒரு வழக்கை தொடுத்து ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.முல்லை கூறுகையில், ஆந்திர அரசு தொடர்ந்து தடுப்பணைகள் கட்டுவது பாலாற்றின் மீதான நமது மாநிலம் மற்றும் விவசாயிகளின் உரிமை மறுக்கும் செயலாகும். தமிழக பாலாற்றை பாலைவனமாக மாற்றக் கூடிய செயலை தொடர்ந்து செய்து, ஆந்திர அரசின் நடவடிக்கையை உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றின் மீதான நமது உரிமையை நிலை நாட்ட அனைத்துக் கட்சிகள், விவசாயி அமைப்புகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com