முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது என, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது என, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 தேனியில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடையே கூறியதாவது:
 தேனி மாவட்டத்தில் அரசு சார்பில் உணவுப் பூங்கா அமைப்பதற்கு 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட உள்ளது. இத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்திப் பொருள் பதப்படுத்தும் தொழில், மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில் தொடங்கவும், உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 பெரியகுளம் பகுதியில் மாங்கூழ் தயாரிப்பு தொழில் தொடங்குவதற்கு அரசு சார்பில் தனியாருக்கு 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். போடி-மதுரை அகல ரயில் பாதை திட்டப் பணிகளை துரிதப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
 18-ஆம் கால்வாய்க்கு புதிய அரசாணை: தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் திட்டம் போடி பகுதி வழியாக கொட்டகுடி ஆறு வரை நீட்டிக்கப்பட்டு, சோதனை நீரோட்டம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 18-ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கும் காலம், தண்ணீரின் அளவு, நீர் பங்கீடு ஆகியன குறித்தும், 58-ஆம் கால்வாய் திட்ட தண்ணீர் பங்கீடு குறித்தும், புதிய நிலையான அரசாணை வெளியிடப்பட உள்ளது.
 கேரளம் தொடர்ந்து இடையூறு: பெரியாறு அணை அருகேயுள்ள சிற்றணையை பலப்படுத்துவதற்கு, தமிழக அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பணிகளுக்கான கட்டுமானப் பொருள்கள் கேரளத்தில் உள்ள வலக்கடவு வழியாக பெரியாறு அணைப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், சிற்றணையை பலப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிக்காக, அப்பகுதியில் உள்ள சில மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி மறுப்பதுடன், பணிகளுக்கு இடையூறு செய்து வருகிறது.
 முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு 4 ராட்சதக் குழாய்கள் மற்றும் இரைச்சலாறு மூலம் மொத்தம் 2,300 கன அடி வரை மட்டுமே தண்ணீர் கொண்டு செல்ல முடியும். எனவே, மழைக் காலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் தேங்கும் உபரிநீரை தமிழகப் பகுதிக்கு முழுமையாகக் கொண்டு சென்று, தென் மாவட்டங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு புதிதாகக் கால்வாய் மற்றும் 20 குழாய்கள் அமைத்துக் கொள்ள, மத்திய மற்றும் கேரள அரசுகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
 தேனி மாவட்டம், வருஷநாடு, கம்பம், போடி மலைப் பகுதிகளில் நிலப்பட்டா வைத்திருப்பவர்கள் அந்த நிலங்களில் விவசாயம் செய்து வருவதில் எவ்வித பிரச்னையும் இல்லை. வன நிலங்களை பாதுகாக்கும் கடமை வனத் துறைக்கு உள்ளது என்றார்.
 பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரா. பார்த்திபன், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com