உலகம் சுற்றும் பிரதமராக மோடி விளங்கி கொண்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்

உலகம் சுற்றும் பிரதமராக மோடி விளங்கி கொண்டிருக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகம் சுற்றும் பிரதமராக மோடி விளங்கி கொண்டிருக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற கழக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
நான் எண்ணிப் பார்க்கிறேன் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு இந்த அளவிற்கு வளர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் இளைஞர்களால்தான் இந்த இயக்கம் இன்றைக்கு கம்பீரமாக நின்று கொண்டிருப்பதை யாரும் மறுத்திட மறைத்திட முடியாது. அறிஞர் அண்ணாவாக இருந்தாலும் சரி, தலைவர் கலைஞராக இருந்தாலும் சரி, நம்முடைய பேராசிரியராக இருந்தாலும் சரி ஏன் இந்த இயக்கத்தை உருவாக்கி இருக்கக்கூடிய எத்தனையோ தலைவர்கள் அது நாவலராக இருந்தாலும், மதியழகனாக இருந்தாலும், ஆசைத்தம்பியாக இருந்தாலும் இப்படி வரிசைப்படுத்தியே சொல்லிக்கொண்டிருக்கலாம். அவர்கள் எல்லாம் இளைஞர்களாக இருந்த நேரத்தில் தான் இந்த இயக்கமே, உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.

நானும் இன்றைக்கு இந்த இயக்கத்தினுடைய தலைவராக பொறுப்பேற்றிருக்கிறேன் என்று சொன்னால் ஏதோ திடீரென்று நாளைக்கே முதல்வராக வந்தேதீரவேண்டும் என்று அறிவிப்பை தந்துவிட்டு நான் இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொள்ளவில்லை. நானும் பள்ளிப் பருவத்திலே படித்துக் கொண்டிருந்தபோது 1967-ம் ஆண்டிலே கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க என்ற ஒரு அமைப்பை அங்கே ஏற்படுத்தி அதற்குபிறகு படிப்படியாக வளர்ந்து 1980-ல் தலைவர் கலைஞர் இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை  மதுரை ஜான்சி ராணி பூங்காவில் துவங்கி அதற்குப் பிறகு 1981-ல் இளைஞர் அணியினுடைய செயலாளராக என்னை நியமித்து இன்றைக்கு கம்பீரமாக வளர்ந்து வந்திருக்கிறது.

ஆகவே, இளைஞராக இருந்த நேரத்திலே இந்தக் கட்சியை வளர்ப்பதற்கு எப்படி பாடுபட்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டதற்குப் பிறகு தான், 13 ஆண்டுகாலத்திற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பைப் பெற்றோம். இன்னும்கூட நான் சொல்லவேண்டும் என்று சொன்னால் வரலாற்றில் பதிவாகியிருக்கக் கூடிய ஒரு செய்தியை உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டும் என்று சொன்னால், 1989-1990-ம் ஆண்டிலே தான் தேசிய முன்னணி தொடக்கவிழா ஒன்றை சென்னையில் நம்முடைய தலைவர் கலைஞர் முன்னின்று நடத்தினார்கள். தேசிய முன்னணி தொடக்க நிகழ்ச்சிக்கு தேசிய அளவிலான தலைவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். ஆந்திர மாநிலத்தில் இருந்து என்.டி.ராமாராவ் வந்தார்கள். அதேபோல வி.பி.சிங் அவர்களும் வந்தார்கள். வாஜ்பாய் வந்தார்கள், இப்படி எல்லா மாநிலத்தில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் அந்த மாநாட்டிற்கு வருகை தந்த நேரத்திலே, அப்பொழுது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகப் பெரிய ஒருமாபெரும் பேரணியை அண்ணா சாலையில் நாம் நடத்திக் காட்டினோம்.

அந்த அண்ணா சாலையில் நடைபெற்ற மிகப் பெரிய பேரணிக்கு முன்னனி வகுத்த அணி எந்த அணி என்று கேட்டால் இளைஞர் அணி தான். இளைஞர் அணி அன்றைக்கு முன்னணி வகுத்து வந்தது. அந்த பேரணியை எல்லா மாநிலத்தினுடைய தலைவர்களும் பார்த்தார்கள், அதற்குபிறகு நாம் வெற்றி பெற்றோம். மத்தியிலே நம்முடைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி உருவானது. வி.பி.சிங் அன்றைக்கு பிரதமராக பொறுப்பேற்றார்கள். 1989-ல் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். அதன்பிறகு சட்டப்பேரவை உறுப்பினர் அடங்கிய ஒரு குழுவோடு நான் டெல்லிக்கு செல்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். அந்த வாய்ப்பைப் பெற்ற போது நான் பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களை சந்திக்கச் சென்ற நேரத்தில் அப்பொழுது என்னை அறிமுகப்படுத்தி வைத்தர்கள்.

இவர்தான் ஆயிரம் விளக்கு தொகுதியினுடைய சட்டப்பேரவை உறுப்பினர். சட்டப்பேரவை உறுப்பினராக வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் கலைஞருடைய மகன் என்று என்னை அறிமுகப் படுத்தினார்கள். அறிமுகப்படுத்திய நேரத்தில் அன்றைக்கு பிரதமராக இருந்த வி.பி.சிங் என்ன சொன்னார் என்று கேட்டால், இவரை நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்துகிறீர்களா இவரை எனக்கு தெரியாதா, சென்னையிலே தேசிய முன்னணி தொடக்கவிழா நடந்தபோது இலட்சக்கணக்கான இளைஞர்களை ஒன்று திரட்டி அழைத்து வந்து அந்த இளைஞர் அணியுடைய அணிவகுப்புக்கு தலைமை வகித்து வந்தவன் தானே இவன் என்று அவர் மகிழ்ச்சியோடு சொன்னார்.

அதுதான் இன்னமும் என் நெஞ்சிலே பசுமையாக பதிந்திருக்கிறது. எதற்காக நான் சொல்லுகிறேன் என்று சொன்னால், இளைஞர்கள், இளைஞர் அணி இந்த இயக்கத்திற்கு எவ்வளவு வலுவாக இருந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டக இருக்கிறது. அந்தப் படை வரிசையில் தான் இன்றைக்கு மணமகனாக வீற்றிருக்கக்கூடிய ராமச்சந்திர ராஜா என்கிற இளைஞர் அணியினுடைய நகரத் துனண அமைப்பாளராக இருந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கிறபோது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

அதேபோல், நாட்டில் இன்றைக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளையும் தயவு கூர்ந்து நீங்கள் மறந்துவிடக்கூடாது, மத்தியில் ஒரு ஆட்சி நடக்கிறது, மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இரண்டு தினங்களுக்கு, முன்பு ஆந்திர மாநிலத்தினுடைய முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னைக்கு வந்து என்னை சந்திக்கின்ற நேரத்தில், என்னை சந்தித்துவிட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கிற போது, அவரிடத்தில் கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆட்சியைப் பற்றி சொல்லுங்கள் என்று, ஒரே வரியிலே சொன்னார். ‘ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா?, என்று கேட்டார். இதைவிட கேவலம் – வெட்கம் இந்த ஆட்சிக்கு தேவையில்லை. காரணம் ஒரு “கிரிமினல் கேபினெட்” தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

முதல்வர் சி.பி.ஐ விசாரணையில் சிக்கியிருக்கிறார். துணை முதல்வர் இன்றைக்கு பல குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கிறார். நீதிமன்றத்தில் இன்றைக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார். அதேபோல், அமைச்சர்கள் வரிசையை எடுத்துப் பார்த்தீர்கள் என்று சொன்னால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், குட்கா புகழ், இப்பொழுது குட்கா புகழ் என்று சொல்லமுடியாது டெங்கு புகழ் அந்த அளவிற்கு பெரிய பட்டங்களை பெற்றிருக்கக்கூடிய அமைச்சர் அவர் வருமான வரித்துறையிடம் சிக்கியிருக்கிறார். அதற்கடுத்தது தங்கமணி, வேலுமணி இப்படி பல அமைச்சர்கள். ஒரு கிரிமினல் கேபினெட் அமைந்துள்ளது. இந்த ஆட்சி என்றைக்கு ஒழியும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆட்சி இன்றைக்கு தப்பித்து நிலைத்திருப்பதற்கு காரணம் என்னவென்று கேட்டீர்களானால், மத்தியில் இருக்கின்ற ஆட்சி. ஏனென்றால், மத்தியில் இருப்பவர்கள் செய்யக்கூடிய காரியத்தை எதைப்பற்றியும் கவலைப்படப்போவதில்லை, நீட் பிரச்னையா கவலை இல்லை, இந்தியை திணிக்கவேண்டுமா கவலையில்லை. எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று ஓப்பனாக விட்டிருக்கிறார்கள், அந்த நிலையில் தான் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பிரதமரைப் பற்றி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு எது பிடிக்காது என்று கேட்டீர்கள் என்றால், சோசலிசம் பிடிக்காது ஜனநாயகம் பிடிக்காது, மதச்சார்பின்மை பிடிக்காது. இது தான் பிரதமருடைய வேலை, இந்த பிரதமராக இருக்கக்கூடியவர் பற்றி, நான் கூட அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிற போது எடுத்துச் சொன்னேன். என்னவென்று கேட்டீர்கள் என்றால், வெளிநாடு வாழ் இந்தியர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோல், வெளிநாடு வாழ் பிரதமர் யார் என்று கேட்டீர்கள் என்றால் மோடி தான் இதுவரைக்கும் பிரதமராக வந்து அவர் செய்துள்ள சாதனை உலகத்திலேயே பிரதமராக இருந்து மோடிதான் 84 நாடுகளுக்கு போய்வந்த நேரத்திலே அவருக்காக செலவு செய்த தொகை ஏறக்குறைய 1500 கோடி ரூபாய், அது அவர் சொந்த பணமா? மக்களுடைய வரிப்பணம் தயவு செய்து மறந்துவிடக்கூடாது. போகிற பிரதமர் அந்த நாட்டிற்கு சென்று இந்த காரியத்தை செய்திருக்கிறார். அந்த நாட்டில் இருந்து  இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்திருக்கிறார். அதனால், இந்தியா இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு போய் அவர் சுற்றுப்பயணம் செய்து வந்தால் கூட நான் கவலைப்பட மாட்டேன்.

உலகம் சுற்றும் வாலிபனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். இன்றைக்கு உலகம் சுற்றும் பிரதமராக மோடி விளங்கி கொண்டிருக்கிறார். இது தான் இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலை இதை எல்லாம் நீங்கள் மறந்துவிடக்கூடாது. இன்றைக்கு நாட்டில் எங்கு பார்த்தாலும் போராட்டம் - ஆர்பாட்டம் விவசாயிகள் ஒருபக்கத்தில் - தொழிலாளர் தோழர்கள் ஒருபக்கத்தில் - அரசு ஊழியர்கள் ஒரு பக்கம் - சத்துணவு அமைப்பாளர்கள் ஒரு பக்கம். இன்றைக்கு வந்திருக்கிற செய்தி என்னவென்று பார்த்தீர்கள் என்றால், 1100 பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்படப்போவதை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய 5 லட்சம் ஊழியர்கள் அதில் இருக்கிறார்கள். 5 லட்சம் ஊழியர்கள் அதனால் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வியாபாரம் செய்ய முடியாத அளவிற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்கு சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் இன்றைக்கு தங்களுடைய தொழிலைக்கூட செய்யமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்னையை யார் தீர்த்து வைக்க வேண்டும். அரசு  பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள். மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக தலையிட்டு அவர்களை அழைத்து உட்கார வைத்து பேசி ஒரு சுமுகமான தீர்வு ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கூடிய இந்த சிக்கல்களில் இருந்து அவர்களை தப்பிக்க வைக்க இந்த அரசு முற்படுகிறதா என்றால் இல்லை. அவர்களைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைபட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

மத்தியில் பிரதமராக இருக்கக்கூடிய மோடியுடைய நினைவெல்லாம் அதானி – அம்பானி. இங்கு இருக்கக்கூடியவர்களுடைய நினைவெல்லாம் கமிஷன் – கலெக்சன் – கரெப்சன். அறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு கற்றுத் தந்தது கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு. ஆனால், கடமை – கண்ணியம் – கட்டுப்பாடை இவர்கள் பின்பற்றவில்லை. அதுவும் க – க – க தான். இப்படித்தான் அவர்களுடைய ஆட்சி இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறதே தவிர வேறல்ல, இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டக்கூடிய நேரம் விரைவிலே வந்து கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வரப்போகிறது. அதற்கிடையில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வரும் என்று எதிர் நோக்கி காத்திருக்கிறோம். ஒரு வேலை எல்லாம் சேர்த்து பாராளுமன்ற தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக வந்தால் கூட ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த நிலையில் தான் இன்றைக்கு நாம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம்.

இதையெல்லாம், நீங்கள் உணர்ந்து பார்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உங்களுக்கு பணியாற்ற தொண்டாற்ற உறுதி எடுத்துக் கொண்டுள்ள நிலையிலே கலைஞர் வழி நின்று பாடுபட பயணிக்கத் தயாராக இருக்கிறோம். அதற்கு நீங்கள் என்றைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சொல்லி அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com