மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து போட்டி: சீதாராம் யெச்சூரி

மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து போட்டியிடுவோம் என்று மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய
சீதாராம் யெச்சூரிக்கு கருணாநிதி எழுதிய நூலை (மார்க்சீம் கார்க்கியின் தாய் நாவல்) அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
சீதாராம் யெச்சூரிக்கு கருணாநிதி எழுதிய நூலை (மார்க்சீம் கார்க்கியின் தாய் நாவல்) அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து போட்டியிடுவோம் என்று மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். 
ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை 5.10 மணியளவில் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சுமார் 45 நிமிஷங்களுக்கு மேலாக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் சீதாராம் யெச்சூரி கூறியது:
கடந்த நான்கரை ஆண்டு கால மத்திய பாஜகவின் ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தையும் குடியரசையும் மதிக்கும் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சிறந்த இந்தியாவை உருவாக்க முன் வர வேண்டும். இக்கருத்தைத்தான் மு.க.ஸ்டாலினும் நானும் பகிர்ந்துகொண்டோம். இந்தக் கருத்தாக்கத்துக்காக மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்.
தேர்தல் கூட்டணியைப் பொருத்தவரை முதலில் மாநிலங்களில் இருந்துதான் தொடங்கும். அதன் பிறகுதான் தேசிய அளவில் கூட்டணி அமையும்.
திமுகவுடன் இணைந்து...தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவுடன் இணைந்து வரும் தேர்தல்களைச் சந்திப்பது என முடிவு செய்துள்ளோம். கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இடம்பெறக்கூடும்.
தேசிய அளவில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே அனைத்து முடிவுகளும் தெரிய வரும்.
இந்தியாவையும், இந்திய ஜனநாயகத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே நாங்கள் இணைந்துள்ளோம்.
ரஜினி படங்களின் ரசிகன்: ஒரு நடிகராக ரஜினியை மிகவும் மதிக்கிறேன். அவர் படங்களின் ரசிகன் நான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரின் படங்களைப் பார்ப்பேன். மோடிக்கு மாற்று யார் என்று கேட்கிறீர்கள். 2004 மக்களவைத் தேர்தலின்போதும் வாஜ்பாய்க்கு மாற்று யார் என்று அப்போதைய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், பாஜக தோல்வியுற்று ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆட்சி புரிந்த பிரதமராக மன்மோகன் சிங் வந்தார். அதனால், மாற்று என்பது தானாகவே அமையும்.
பிரதமர் தேர்வை...இந்திய ஜனநாயகத்தின் மீதும் மக்கள் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு முதலில் பாஜக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்றுபவர்கள் நாம். மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள்தான் பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியும். பிரதமரை தனியொருவராக நீங்களோ, நானோ தேர்ந்தெடுக்க முடியாது என்றார்.
பாஜகவை தோற்கடிக்க ஆலோசனை: சீதாராம் யெச்சூரியுடனான சந்திப்பு சிறந்த முறையில் இருந்தது. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைத் தோற்கடிப்பதற்காக அணிகள் அமைப்பது குறித்து ஆலோசித்தோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com