அனிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க தடை -  உயர் நீதிமன்றத்தில் அனிதாவின் தந்தை வழக்கு

மாணவி அனிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க தடை விதிக்கக்கோரி அனிதாவின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
அனிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க தடை -  உயர் நீதிமன்றத்தில் அனிதாவின் தந்தை வழக்கு

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வினால் மருத்துவ வாய்ப்பை இழந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க தடை விதிக்கக்கோரி அனிதாவின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீட் தேர்வு காரணமாக, மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, ஆர் ஜே பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அஜய்குமார் இயக்கத்தில் டாக்டர். அனிதா எம்பிபிஎஸ் என்ற தலைப்பில் திரைப்படம் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை கண்ட மாணவி அனிதாவின் தந்தை சண்முகம், அனிதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக, அவர் தாக்கல் செய்த மனுவில், 

"எனது மகள் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தும் நீட் தேர்வு அறிமுகத்தினால், அவரால் எம்பிபிஎஸ் சீட்டை பெற முடியவில்லை. மருத்துவ இடத்துக்கு தனது நல்ல மதிப்பெண்களை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் உச்ச நீதிமன்றம் வரை சென்றார். ஆனால், உச்ச நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. இந்த ஏமாற்றத்தால் மனமுடைந்த அவர் செப்டம்பர் 1, 2017-இல் தற்கொலை செய்துகொண்டார். 

அவரது மரணம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அது பரபரப்பானது. ஒருசில இயக்குநர்கள் தங்களது சுயலாபத்துக்காக அனிதாவின் மரணம் ஏற்படுத்திய அனுதாபத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். 

அண்மையில், தினசரி நாளிதழில் டாக்டர் அனிதா எம்பிபிஎஸ் என்ற தலைப்பில் ஆர் ஜே பிக்சர்ஸ் தயாரிப்பில், அஜய்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாக விளம்பரம் பார்த்தேன். எனது மகள் தொடர்பான திரைப்படத்துக்கு நானோ எனது மகனோ எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. அதனால், அஜய்குமார் இயக்கும் திரைப்பட தயாரிப்புக்கு தடை விதிக்கவேண்டும். மேலும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கவேண்டும் " என்றார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், இதுதொடர்பாக வரும் 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அஜய்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com