அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழா கொடியேற்றம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன்
தீபத் திருவிழா கொடியேற்ற நிகழ்வைக் காண குவிந்த பக்தர்கள்.
தீபத் திருவிழா கொடியேற்ற நிகழ்வைக் காண குவிந்த பக்தர்கள்.


திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. அன்றைய தினம் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண ஆண்டுதோறும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வந்து, செல்கின்றனர்.
இந்த நிலையில், நிகழாண்டுக்கான தீபத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பிறகு, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஸ்ரீவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கொடியேற்றம்: அதிகாலை 5 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் துலா லக்கினத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் மூலவர் சந்நிதிக்கு எதிரே உள்ள 73 அடி உயர தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கோயில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்தனர். சரியாக அதிகாலை 5.50 மணிக்கு தீபத் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது.
பக்தர்கள் பக்திப் பரவசம்: இந்த நிகழ்வைக் காண அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். கொடியேற்றம் நடைபெற்றபோது, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கங்களை எழுப்பி வழிபட்டனர்.
விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, மக்களவை உறுப்பினர் ஆர்.வனரோஜா, கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர், கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.
நவ.23-இல் மகா தீபத் திருவிழா
தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான வரும் 20-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் தொடங்குகிறது. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் என 5 தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக மாட வீதிகளை வலம் வந்து, நள்ளிரவில் மீண்டும் நிலைக்கு வந்தடைகின்றன.
விழாவின் 10-ஆம் நாளான வரும் 23-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகின்றன. மகா தீபம் ஏற்றப்படும் அதே நேரத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் அருள்பாலிக்கிறார். வரும் 24, 25, 26-ஆம் தேதிகளில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தெப்பல் உத்ஸவம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com