தமிழ்நாடு

அழிந்து வரும் மான் இனத்தைக் காக்க  சரணாலயம் அமைக்கப்படுமா?

DIN


ஆம்பூர் அருகே வனப்பகுதியில் தொடர்ந்து நாய்களால் காட்டு மான்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. மான் இனத்தைப் பாதுகாக்க மான்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியில் பைரப்பள்ளியை ஒட்டி துருகம் காப்புக் காடுகளும், ஊட்டல் காப்புக் காடுகளும் உள்ளன. இந்த வனப்பகுதியில் உள்ள ஊட்டல் தேவஸ்தானம் பகுதியில் சனிக்கிழமை தண்ணீர் தேடி வந்த மானை நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததால் சுமார் ஒரு வயது உடைய பெண் மான் உயிரிழந்தது.
இதுபோன்று இப்பகுதியில் வேட்டையாடுபவர்கள் தாங்கள் வளர்க்கும் வளர்ப்பு நாய்களால் மூலம் மான்களை விரட்டி கடிக்கச் செய்வதும், அதனால் புள்ளிமான்கள் அடிக்கடி உயிரிழப்பதும் தொடர்கதையாக உள்ளது.
ஆம்பூர் வனச்சரகத்தில் மேற்குப் பகுதியில் மாதகடப்பா மலை தொடங்கி சாரங்கல் குந்தேலி மூலை வனப்பகுதி வரை சுமார் 20,000 ஏக்கர் தமிழக வனப்பகுதி உள்ளது. மாதகடப்பா, காரப்பட்டு, அரங்கல்துருகம், பொன்னப்பல்லி (தெற்கு), பொன்னப்பல்லி (வடக்கு), ராள்ளக்கொத்தூர், மிட்டாளம் (தெற்கு), மிட்டாளம் (வடக்கு), மாச்சம்பட்டு, பாலூர், சாரங்கல் பிரிவு வனப்பகுதிகள் உள்ளன.
இந்த ஆம்பூர் வனச்சரகத்தின் மேற்குப் பகுதி காப்புக்காடுகள் ஆந்திர மாநில கெளண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகளை ஒட்டி உள்ளது. பெருங்கானாறு, மாதகடப்பா கானாறு, தேவுடு கானாறு, பொன்னப்பல்லி ஊறல் குட்டை கானாறு, ராள்ளகொத்தூர் கம்மாளன் கிணறு கானாறு, பைரப்பள்ளி தேன்கல் கானாறு, ஊட்டல் மலை கானாறு, கோனேட்டி கானாறு, பெங்களமூலை கானாறு என பல்வேறு நீர்வரத்து கானாறுகள், குளங்கள், குட்டைகள், ஏரிகள், கிணறுகள் என பல்வேறு நீர்நிலைகள் காப்புக்காடுகளில் மிகுந்து காணப்படுகின்றன.
இதனால், இங்கு புள்ளிமான், கடமான்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. புள்ளிமான்களை இறைச்சிக்காக வேட்டையாடும் நிலை இதுநாள் வரை இருந்து வந்தது. தற்போது மான்கொம்புகளுக்கு சந்தையில் மதிப்பு கூடியுள்ளதால் வேட்டையாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
புள்ளிமான்களை கள்ளத் துப்பாக்கிகளால் சுட்டும், காப்புக்காடுகளில் வலைகள் கட்டியும், வளர்ப்பு நாய்களுக்கு நன்கு பயிற்சி அளித்தும் வேட்டையாடி வருகிறார்கள். 
இந்த வேட்டையில் தமிழக பகுதிகளைச் சேர்ந்த சமூக விரோதிகள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. அதனால் பெருமளவில் புள்ளிமான் இனமும், கடமான் இனமும் அழிந்து வருகின்றன.
அழிந்து வரும் மான் இனத்தைக் காப்பாற்ற பைரப்பள்ளி ஊட்டல் தேவஸ்தானம் வனப்பகுதியில் உள்ள தூருசந்து என்ற இடத்தில் மான்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வனவிலங்கு ஆர்வலர்களும் நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆம்பூர் வனச்சரகத்தின் மேற்கு பகுதியை ஒட்டியுள்ள ஆந்திரத்தின் காப்புக் காடுகளை அந்த மாநில அரசு கெளண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் என பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துள்ளது. அங்கு வேட்டையில் ஈடுபடுவோர் கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்கப்படுகிறார்கள். எனவே, அவர்கள் தமிழக வனப்பகுதியில் தங்கி வேட்டையாடி வருகிறார்கள். இதனால் ஆம்பூர் வனப்பகுதியில் மான்கள் சரணாலயத்தை அமைத்து புள்ளிமான்களையும், அரியவகை கடமான்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.
அதே போல் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள ஆம்பூர் வனச்சரகத்தின் மேற்குப் பகுதிகளை வனத்துறையினர் கண்காணிக்க வனவர் தலைமையில் 5 வனக்காப்பாளர்கள், 
5 வனக்காவலர்கள் என மொத்தம் 11 பேர் பணியாற்றும் பகுதியில் ஒரு வனவர், ஒரு வனக்காப்பாளர், ஒரு வனக்காவலர் என மூவர் மட்டுமே உள்ளனர். இதனால் வேட்டையாடுபவர்களின் எண்ணிக்கையும் தற்போது கூடியுள்ளதாகக் கூறப்படுகிறது. கள்ளச்சாராயம், மணல் கடத்தல், வேட்டைக்காரர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் போதுமான அளவு வனத் துறையினரைப் பணியமர்த்த வேண்டும், மான்கள் வேட்டையாடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவா் - உறுப்பினா்கள் நியமனம்: தமிழக அரசு அழைப்பு

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

SCROLL FOR NEXT