எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.35 கோடியில் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள்: முதல்வர் திறந்துவைத்தார்

சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.35.46 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன இதய சிகிச்சை அறுவை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன இதய அறுவை சிகிச்சை அரங்கத்தை திறந்து வைத்துப் பார்வையிட்ட முதல்வர்
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன இதய அறுவை சிகிச்சை அரங்கத்தை திறந்து வைத்துப் பார்வையிட்ட முதல்வர்


சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.35.46 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன இதய சிகிச்சை அறுவை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை திறந்து வைத்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ. 35.46 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன இதய சிகிச்சை அறுவை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு, சிகிச்சைக்கு வரும் குழந்தைகள், பெற்றோர்கள் அமர்வதற்கான நவீன ஒலி-ஒளி அரங்கம், குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகம், அரிய மரபணு குறைபாடு சிகிச்சைத் துறை, பச்சிளம் குழந்தைகளுக்கான தைராய்டு பரிசோதனை திட்டம், நவீன இதய சிகிச்சை மையத்தின் நுழைவாயில் ஆகியவற்றின் திறப்பு விழா மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிசிச்சைப் பிரிவுகள் உள்ளிட்டவற்றைத் திறந்து வைத்து மருத்துவமனையின் பொன்விழா ஆண்டுக்கான நினைவு அஞ்சல் அட்டையை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் தாய்-சேய் நல சேவைகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் நிதி உதவியுடன் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி, அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம், தாய்ப்பால் வங்கி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ. 1 கோடி மதிப்பில் மரபியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வகை செய்யும் பச்சிளம் குழந்தைகளுக்கான தைராய்டு பரிசோதனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 837 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை சரிசெய்யும் வகையில் இங்கு நவீன சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார் முதல்வர்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், வி. சரோஜா, கே. செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.ஏ. செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
அம்மா உணவகத்தில் ஆய்வு: நிகழ்ச்சியைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்துக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்று, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இட்லி, பொங்கலை சாப்பிட்டுப் பார்த்தார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் இட்லி, பொங்கல் சாப்பிட்டனர். இதையடுத்து, உணவின் தரம் மற்றும் உணவகத்தின் சுகாதாரத்தைப் பேணிக் காக்க பணியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com