கஜா புயல் நிலவரம்: அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் உடனுக்குடன்!

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.


சென்னை: கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் 6 மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, பொதுமக்களுக்கும் சில  அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன.

இந்த புயல் கரையை கடக்கும் போது கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக் கூடும். கன மழை பெய்யும்.

கஜா புயல் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இங்கே உடனுக்குடன்..

பகல் 17.35 : திருவாரூர் பகுதிகளில் லேசான காற்று, தூறல் மழை தற்போதுதான் தொடங்கியிருக்கும் நிலையில், வானிலை மோசமடைய வாய்ப்பிருப்பதாக தகவல்.

பகல் 17.34: திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

பகல் 17.29 : கஜா புயல் காரணமாக கன மழை பெய்தால் 24 மணி நேரமும் சிறு அணைகளைக் கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 

பகல் 16.33 : சென்னை மெரீனா கடற்கரைக்குள் பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ளே இருப்பவர்களையும் காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.

பகல் 16.05:  பொதுமக்கள் யாரும் வேடிக்கைப் பார்க்கவோ, செல்ஃபி எடுக்கவோ கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தல்

பகல் 15.06: தமிழகம் முழுவதும் 936 அவசர கால ஊர்திகள், 405 ஆம்புலன்ஸ்கள், 41 இரு சக்கர வாகனங்கள் தயார் நிலையில்.

பேருந்துகளை இயக்கத் தடை

பகல் 15.06: கஜா புயல் கரையை கடக்கும் போது காற்று பலமாக வீசும் என்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று போக்குவரத்துத் துறைக்கு வருவாய்த் துறை அறிவுறுத்தியுள்ளது.

பகல் 01.55கடலூரில் 9 மற்றும் நாகையில் 10 ஆம் எண் புயல் எச்சரிகை கூண்டு 

கஜா புயல் இன்று இரவு கரையைக் கடக்க உள்ள நிலையில், கடலூரில் 9 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு மற்றும் நாகையில் 10 ஆம் எண் புயல் எச்சரிகை கூண்டு ஏற்ப்பட்டுள்ளது.  

அதேசமயம் பாமபனில் 8 மற்றும் புதுச்சேரியிலும் 9 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  

துறைமுகம் இருக்கும் பகுதி வழியாக புயல் கரையைக் கடக்கும் என்பதற்கும், உச்சபட்ச எச்சரிக்கை நிலை என்பதற்கும் அடையாளமாக  10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கமாகும்.     

நாகை அருகே கஜா புயல் கரையைக் கடக்கும் போது, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பகல் 01.05 : நாகை, கடலூர் உள்ளிட்ட புயல் பாதிப்பு ஏற்படக் கூடிய மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு சில அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது. அதில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டுக்கு அனுப்புமாறும், பொதுமக்கள் யாரும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள பணியாளர்கள் 3 மணிக்குள் வீட்டுக்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

பகல் 12.30 : இன்று இரவு 8 - 11 மணிக்குள் கடலூர் - பாம்பன் இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என்று மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அனுப்பியுள்ளது. முன்னதாக இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

பகல் 12.20 : இது சென்னைக்கான புயலோ, மழையோ இல்லை.. நமக்கானது இன்னும் 3 நாட்களில்!

கஜா புயல் குறித்த முன்னறிவிப்புகளும், முன்னெச்சரிக்கைகளும் நமக்கானது கிடையாது. இதன் மூலம் கிடைக்கும் மழை சென்னைக்கு கூடுதல் போனஸ்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இன்று மாலை கரையை கடக்கும், இன்று இரவு கரையை கடக்கும் என்று செய்திகளைப் பார்க்கும் சென்னைவாசிகள், எங்கே மழையையேக் காணோம் என்று வானத்தை ஊற்றுப் பார்த்து சூரிய வெளிச்சம் கண்ணைக் கூசும் போது, வானிலை முன்னறிவிப்புகளை கிண்டல் செய்து கொண்டிருக்கலாம்.

ஆனால், இந்த புயல் சின்னமோ, மழையோ சென்னைக்கானது கிடையாது என்றும், இன்னும் 3 நாட்களில் சென்னைக்கான மழை வரவிருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று இரவு 11.30 மணியளவில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது, வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் சென்னை, நாகையிலிருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 14 கி.மீ. வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் தற்போது மணிக்கு 18 கி.மீ.ஆக அதிகரித்துள்ளது. 

கடலூர் துறைமுகத்தின் இன்று காலைய நிலவரம்..
 

அனைத்துப் படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 

கடலூர் மாவட்டம்: சில்வர் பீச்சின் தற்போதைய புகைப்படங்கள்


கஜா புயல் கரையை கடக்கும்போது சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

இன்று நடைபெற இருந்த பாரதிதாசன் பல்கலை.பருவத் தேர்வுகள் ரத்து

கஜா புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

கஜா புயல் எதிரொலி: ரயில்கள், சிறப்புக்கட்டண ரயில்கள் ரத்து

கஜா புயல் எதிரொலியாக பயணிகளின் பாதுகாப்பைக் கருதி திருச்சி தஞ்சை சிறப்புக்கட்டண ரயில்கள்  உள்பட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

கஜா  புயல் எச்சரிக்கை: காரைக்கால், மயிலாடுதுறை தடத்தில் ரத்தாகும் ரயில்கள்
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை தடத்திலான விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் போக்குவரத்து நவ. 15, 16 ஆகிய தேதிகளில் முழுமையாகவும், பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கஜா புயலை எதிர்கொள்ள தயாராவோம்: எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

புயலை சமாளிக்க புயல் கரையைக் கடக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

வீடு மற்றும் வீட்டின் கட்டமைப்பை பரிசோதியுங்கள். எங்கேனும் வெடிப்பு இருந்தால் பூச்சு வேலை செய்தல், கதவுகளின் தாழ்ப்பாள்களை சரி செய்தல் போன்றவற்றை துரிதமாக முடியுங்கள்.

வீட்டுக்கு அருகே இருக்கும் முறிந்த கிளைகள், பட்டுப்போன மரக்கிளை, அதிக எடையுடன் மரக் கிளை இருந்தால் அதனை அப்புறப்படுத்துங்கள். 

வீட்டு மாடி, உயரமான சுவர்களில் இருக்கும் கட்டைகள், பயன்படுத்தாத கண்ணாடி, கண்ணாடிப் பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும்.

பேட்டரிகள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள், குடிநீர் கேன்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளவும்.

பாதி இடிந்த நிலையில் இருக்கும் கட்டடங்களை இடித்துத் தள்ள வேண்டும்.

உலர்ந்த பழங்கள் போன்ற சமைக்காமல் அப்படியே சாப்பிடும் பொருட்களை வாங்கி வீட்டில் பத்திரப்படுத்துங்கள்.

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

புயல் மற்றும் மழை நிலவரம் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள வழிவகை செய்து கொள்ளுங்கள்.

மழை, புயல் பற்றி யார் எந்த தகவல் அனுப்பினாலும் அதனை உடனே ஃபார்வேர்ட் செய்யாதீர்கள்.

எங்கிருந்து வரும் தகவல்களை மட்டும் நம்ப வேண்டும், எது உண்மை என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

தவறான தகவல்களை நீங்களாக யாருக்கும் சொல்ல வேண்டாம், எச்சரிக்கிறோம் என்று கூறி அச்சுறுத்த வேண்டாம்.

கஜா புயல்: தேசிய பேரிடர் குழு விழிப்புணர்வுப் பிரசாரம்

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் தேசிய பேரிடர் குழுவினர் புதன்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டனர்.
கஜா புயல் கடலூருக்கும்,  பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை பிற்பகல் கரையை கடக்கவுள்ள நிலையில் அதன் தாக்கம் கடற்கரை மாவட்டமான புதுச்சேரிக்கு இருக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  இந்நிலையில் புதுவை அரசு சார்பில் கஜா புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதனிடையே புயலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை மீட்பதற்காக அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் செவ்வாய்க்கிழமை புதுச்சேரி வந்தனர்.  மேலும்,  புயலின்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த மழையின்போது பொதுமக்கள் பாதிக்கப்பட்ட ஜெயராம் நகர்,  கிருஷ்ணா நகர்,  ரெயின்போ நகர்,  ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளை தேசிய பேரிடர் மீட்புக் குழு கமாண்டர் அமர் மற்றும் உழவர்கரை நகராட்சி வட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  இதைத்தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com