குற்றச்சாட்டுகளை மட்டுமே செய்திகளாக வெளியிட வேண்டாம்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

ஒருவர் மீது கூறப்படும் புகார்கள் அல்லது குற்றச்சாட்டுகளை மட்டுமே செய்திகளாக வெளியிடக் கூடாது என்று ஊடகங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
நியூஸ் ஜெ தொலைக்காட்சியை புதன்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள்.
நியூஸ் ஜெ தொலைக்காட்சியை புதன்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள்.


ஒருவர் மீது கூறப்படும் புகார்கள் அல்லது குற்றச்சாட்டுகளை மட்டுமே செய்திகளாக வெளியிடக் கூடாது என்று ஊடகங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்டவரின் கருத்துகளையும் இணைத்து அந்தச் செய்தியை வெளியிட வேண்டுமெனவும் அவர் பேசினார்.
நியூஸ் ஜெ செய்தித் தொலைக்காட்சி சேனலை, சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியது:-
நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க அரசும், ஊடகத் துறையும் இரு கண்கள் போலச் செயல்பட வேண்டும். ஊடகங்களின் மூலம் படிக்காத மக்களும் செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. மக்களிடையே விழிப்புணர்வையும், தாக்கத்தையும் ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன. நாட்டு நடப்புகளையும், அரசின் பல்வேறு நலத் திட்டங்களையும் மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், செய்திகளை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகும்போது, அது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாகவும், இளைஞர் சமுதாயத்துக்கு வழிகாட்டியாகவும் இருந்தால் அது நலன் பயக்கும்.
உண்மையை எழுதுங்கள்: பத்திரிகைகள், ஊடகங்களில் எப்போதும் உண்மையை எழுத வேண்டும். உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டும். பரபரப்புக்காக உண்மைக்கு மாறான செய்திகளை பிறரை பாதிக்கின்ற வகையில் வெளியிடக் கூடாது. தனிமனித சுதந்திரம் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு செய்தி கிடைக்கிறது என்றால், அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து வெளியிட வேண்டும். ஒருவர் மீது புகார் அல்லது குற்றச்சாட்டு வருகின்றபோது, சம்பந்தப்பட்டவர்களின் கருத்தோடு அந்தச் செய்தியை வெளியிட வேண்டும். அதுதான் பத்திரிகை தர்மம்.
வணிக நோக்கத்துக்காகவும், தொழில் போட்டி காரணமாகவும் அவசியமற்ற, உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியிடுவதை தவிர்ப்பது நல்லது. ஒரு தொலைக்காட்சியில் வெளியாகும் செய்தி கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது. எனவே, பொறுப்புணர்வோடும், கடமை உணர்வோடும் எவரையும் காயப்படுத்தாத வகையில் செய்திகள் வெளியிடுவது சிறப்பாகும்.
தமிழக அரசு எத்தனையோ மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரு சில ஊடகங்கள் எதிர்மறையான செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் தந்து அதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்கின்றன.
அதே சமயத்தில், அரசின் சார்பில் வெளியிடப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த செய்திகளை அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பு செய்வதில்லை. 
மக்கள் நலத் திட்டங்கள் குறித்த செய்திகளை ஒளிபரப்புவது ஏதோ அரசுக்கு ஆதரவு தருவதாக எண்ண வேண்டாம். அது எங்கோ ஒரு மூலையில் பட்டி தொட்டிகளில் வாழும் ஏழைப் பங்காளனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் என்றார் முதல்வர் கே.பழனிசாமி.
முன்னதாக, தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சி.வி.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் எப்படி இருக்க வேண்டும்?: ஓபிஎஸ் அறிவுரை
நியூஸ் ஜெ செய்தி தொலைக்காட்சி சேனல் தொடக்க விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:-
பத்திரிகை, ஊடகங்களின் செய்தியாளர்கள், எந்த நிலையிலும் தங்களது விருப்பு வெறுப்புகளைக் காட்டாமல், மற்றவர் மனம் புண்படும்படி பேசாமல், தங்களுக்குத் தேவையான செய்திகளை மட்டும் சேகரித்துவரும் மதிநுட்பத்துடன் செயல்பட வேண்டும்.
செய்திகளை வெளியிடும்போது, ஜாதி, மதம், கட்சி, இனம் என்ற பாகுபாடு இல்லாமல் நடுநிலைமையோடு நின்று வெளியிட வேண்டும். அப்படி நடுநிலையானதாகவும், உண்மைத் தன்மையோடும் ஊடகங்களில் செய்திகள் வெளிவரும்போதுதான், அவற்றின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். அனைத்து மக்களும் அதைப் பார்க்கின்ற நிலை உருவாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com