பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா வரும் 2019, பிப்ரவரி 11 -ஆம் தேதி நடைபெறும் என புதுச்சேரி
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் ஏழு நிலை ராஜகோபுரம்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் ஏழு நிலை ராஜகோபுரம்.


திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா வரும் 2019, பிப்ரவரி 11 -ஆம் தேதி நடைபெறும் என புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி புதன்கிழமை தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னிதிகொண்டு அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலுக்கு 2006 -ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. மேலும், இக்கோயிலுக்கு சார்புக் கோயில்களாக விளங்கும் ஸ்ரீ ஆனந்த விநாயகர் மற்றும் 4 வீதிகளிலும் அமைந்துள்ள விநாயகர்கள், நளன் குளம் அருகே உள்ள ஸ்ரீ நளன் கலித்தீர்த்த விநாயகர், சுரக்குடி ஐயனார் கோயில், ரயில்வே பகுதியில் ஸ்ரீ பிடாரியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட 9 கோயில்களுக்கு 2004 -ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.
அனைத்து திருத்தலங்களுக்கும் குடமுழுக்கு நடத்தி 12 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் சார்புக் கோயில்களுக்கும், ஜூலை மாதம் தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கும் பாலஸ்தாபன பூஜை நடத்தப்பட்டு, திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
ஏறக்குறைய ரூ. 1 கோடி திட்ட மதிப்பில், கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் புதுப்பித்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவாக தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஒரு தினத்திலும், சார்புக் கோயில்களில் ஒரு தினத்திலும் குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகம், தேதி நிர்ணயம் செய்து புதுச்சேரி முதல்வருக்கு தெரிவித்தது.
திருநள்ளாறில் பல்வேறு நிகழ்ச்சிகளில் புதன்கிழமை பங்கேற்ற முதல்வர் வி. நாராயணசாமி, குடமுழுக்கு நடைபெறும் தேதியை செய்தியாளர்களிடம் அறிவித்தார். அப்போது அவர் கூறும்போது, ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் மற்றும் சார்பு கோயில்கள் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வரும் 2019, ஜனவரி 28 -ஆம் தேதி திருநள்ளாறில் சார்புக் கோயில்களுக்கும், பிப்ரவரி 11 -ஆம் தேதி ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கும் குடமுழுக்கு செய்யப்படுகிறது என்றார்.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறும்போது, பெரிய கோயிலிலும், சார்புக் கோயில்களிலும் திருப்பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. மழை பெய்தால்கூட பணிகளில் தொய்வு இல்லாத வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது.
ஜன. 20 -ஆம் தேதிக்குள்ளாக அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com