வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து மூன்று மாவட்டங்களின் பாசனத்துக்காக புதன்கிழமை வினாடிக்கு 4,650 கன அடி வீதம்
வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து மூன்று மாவட்டங்களின் பாசனத்துக்காக புதன்கிழமை வினாடிக்கு 4,650 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் முழுக் கொள்ளளவான 71 அடியில் 69 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த அக். 21 ஆம் தேதி அணை முழுக் கொள்ளளவை எட்டியது.
அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திருமங்கலம், மேலூர் பகுதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்தும் அதிகமாக இருந்தது. இதனால், 20 நாள்களுக்கும் மேலாக வைகை அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவில் நீடித்தது. 
இந்நிலையில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் சேகரித்து வைக்கும் வகையில், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று 3 மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதி 3 மற்றும் வைகை பூர்வீக பாசன பகுதி 2 ஆகியவற்றில் உள்ள 5 கண்மாய்களில் நீரை பெருக்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டார். அதையடுத்து, வைகை அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் புதன்கிழமை தண்ணீரை திறந்து வைத்தார்.
வைகை அணையில் இருந்து ஏற்கனவே 1,650 கன அடி வீதம் மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 3 மாவட்டங்களுக்கும் கூடுதலாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 
புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 4,650 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீர்இருப்பு 5,430 மில்லியன் கன அடியாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com