6 மாவட்டங்களில் கடும் பாதிப்பு: சூறையாடியது கஜா

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்த கஜா புயல் 6 மாவட்டங்களில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது.
நாகை நம்பியார் நகர் பகுதியில் புயல் சீற்றத்தால் சேதமடைந்த படகுகள். 
நாகை நம்பியார் நகர் பகுதியில் புயல் சீற்றத்தால் சேதமடைந்த படகுகள். 

29,500  மின்கம்பங்கள் சாய்ந்தன, 40,820  மரங்கள் சேதம், 11,512  குடிசைகள் நாசம்
 

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்த கஜா புயல் 6 மாவட்டங்களில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது. புயலால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் வருவாய், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினர் களம் இறங்கி சேதமதிப்பைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சூறையாடிய கஜா: கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.20 மணி முதல் 2.30 மணி வரைக்குள் நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே சுமார் 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் தீவிர புயலாகக் கரையைக் கடந்தது. அதைத் தொடர்ந்து, அது புயலாகவும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறி தமிழகத்தின் உள்மாவட்டங்களான திருச்சி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையை கொட்டித் தீர்த்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கேரளாவில் மையம் கொண்டிருந்த இது அரபிக் கடலை நோக்கி நகர்கிறது.
பாதுகாப்பு மையங்களில் 81,948 பேர் தங்கவைப்பு: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைப் புயல் தாக்குவதற்கு முன்பாகவே, தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் 109 முகாம்களில் 13 ஆயிரத்து 600 பேர், நாகப்பட்டினத்தில் 102 முகாம்களில் 44 ஆயிரத்து 87 பேர், ராமநாதபுரத்தில் 17 முகாம்களில் ஆயிரத்து 939 பேர், தஞ்சாவூரில் 58 முகாம்களில் 7 ஆயிரத்து 43 பேர், புதுக்கோட்டையில் 25 முகாம்களில் 2 ஆயிரத்து 432 பேர், திருவாரூரில் 160 முகாம்களில் 12 ஆயிரத்து 847 பேரும் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் 13 ஆயிரத்து 229 பேர் குழந்தைகள். ஒட்டுமொத்தமாக கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் 417 மையங்களில் 81 ஆயிரத்து 948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதய
குமார் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகள்: கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளின் எண்ணிக்கை மாலை வரை 18 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடலூரில் 3 பேரும் (2 ஆண், ஒரு பெண்), புதுக்கோட்டையில் 4 பேரும் (3 ஆண், ஒரு பெண்), தஞ்சாவூரில் 5 பேரும் (அனைவரும் ஆண்கள்), திருவாரூரில் 2 பேர் (தலா ஒரு ஆண், பெண்), திருச்சி ஒருவரும் என 11 ஆண்களும், 6 பெண்களும் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனத் தெரிகிறது.
குடிசைகள்-கால்நடைகள்: கஜா புயலால் ஆயிரக்கணக்கான குடிசைகளும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டன. கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய ஏழு மாவட்டங்களில் 11,512 குடிசைகள் சேதமடைந்துள்ளன. இம்மாவட்டங்களில் இதுவரை 28 கால்நடைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக கால்நடைத் துறையினர் தெரிவித்தனர். இவற்றின் உயிரிழப்பு எண்ணிக்கையும் சனிக்கிழமை முழுமையாக தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மரங்கள், மின்கம்பங்கள் சேதம்: அதேபோல், புயல் காரணமாக ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. 40 ஆயிரத்து 820 மரங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 32,818 மரங்கள் சேதமடைந்துள்ளன. 29,500 மின்கம்பங்கள், 102 துணை மின்நிலையங்கள், 495 மின் கடத்திகள், 205 மின்மாற்றிகள், 500 கி.மீ. நீளத்துக்கு மின் வழித்தடங்கள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து சீரமைப்புப் பணிகளில் 11 ஆயிரத்து 371 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


சேத விவரங்கள் கணக்கெடுப்பு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேத விவரங்களைக் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். வருவாய்த் துறையுடன் இணைந்து வேளாண்மை, கால்நடை, மீன்வளம், மின்சாரம், நெடுஞ்சாலைகள் துறை அதிகாரிகளும், அலுவலர்களும் சேத விவரங்களைக் கணக்கெடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், சேத விவரங்கள் தொகுக்கப்பட்டு முதல்வர் பழனிசாமியிடம் விவரங்கள் அளிக்கப்படும் என்றார் அவர்.
விரைவில் மத்திய அரசுக்கு அறிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை காலை தொடர்பு கொண்டு கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். அப்போது, கஜா புயல் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புயலால் ஏற்பட்ட சேதங்கள் பற்றியும், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் நிவாரணப் பணிகள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் பழனிசாமி எடுத்துரைத்தார்.
மேலும், தமிழக அரசின் சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து 471 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 82,000 பேருக்கும் உணவு, உடை, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் எடுத்துரைத்தார். கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை விரிவான அறிக்கையாக உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைப்பதாகவும் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

உருவாகியது முதல் கரையைக் கடந்தது வரை...
நவம்பர் 8: தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. 
நவம்பர் 9: மலேசிய தீபகற்பப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. 
நவம்பர் 10: காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது.
நவம்பர் 11: கஜா புயலாகி சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 930 கி.மீ. தொலைவிலும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கே 980 கி.மீ. தொலைவிலும் மையம்.
நவம்பர் 12: சென்னைக்குக் கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 820 கி.மீ. தொலைவிலும் மையம். 
நவம்பர் 13: சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்குக் கிழக்கு, வடகிழக்கே 700 கி.மீ. தொலைவிலும் மையம். 
நவம்பர் 14: நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கே 580 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து கிழக்கே 490 கி.மீ. தொலைவிலும் மையம்.
நவம்பர் 15: - மாலை 6.50 மணி: நாகப்பட்டினத்துக்குக் கிழக்கே 138 கி.மீ. தொலைவில் மையம். இரவு 10.30 மணிக்கு புயலின் முன்பகுதி கரையைத் தொட்டது. 
நள்ளிரவு 12.30 மணி: வேதாரண்யம்-நாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது.
நவம்பர் 16: அதிகாலை 2.30 மணிக்கு புயலின் கண் பகுதியும்.காலை 6 மணிக்கு முழுமையாக வும் கரையைக் கடந்தது. காலை 10 மணிக்கு தீவிரப் புயல் வலுவிழந்து திண்டுக்கல்லின் மேல் பகுதியில் மையம் கொண்டது. காலை 11.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு நோக்கி நகர்ந்தது. 
இரவு 7 மணி: கேரளாவைக் கடந்து அரபிக் கடல் நோக்கி நகர்வு.

வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.18) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது, வரும் 19, 20 தேதிகளில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (நவ.18) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (நவ.19, 20) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டியில் 170 மி.மீ.: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக தலா 170 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 160 மி.மீ., பேராவூரணி, பட்டுக்கோட்டை, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தலா 140 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 120 மி.மீ., கடலூரில் 90 மி.மீ., தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தலா 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் தொழுதூரில் 70 மி.மீ. மழையும், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம், காஞ்சிபுரத்தில் தலா 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com