தமிழ்நாடு

சட்ட பல்கலை. பேராசிரியர் நியமன விவகாரம்: பதிவாளர் பதிலளிக்க உத்தரவு

DIN


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்களை கண்காணிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் சுதந்திரமான செயல்பாடுகள் குறித்து பதிலளிக்க, பல்கலைக்கழகப் பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து பேராசிரியர் சங்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டப் பல்கலைக்கழகம், அரசு சட்டக் கல்லூரிகளின் முதல்வர், துறை தலைவர், பேராசிரியர், உதவி பேராசிரியர் ஆகிய பதவிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி என்ன, இந்தப் பதவிகளில் இப்போது பணிபுரிபவர்கள் மானியக்குழு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதியுடன் உள்ளனரா என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டு பதிலளிக்கவும், சட்டப் பல்கலைக்கழக பதிவாளரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆர்.சீனிவாசன் ஆஜராகி, மூடி முத்திரையிடப்பட்ட உறையில் இரண்டு அறிக்கைகளை தாக்கல் செய்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் கடந்த 1993 -ஆம் ஆண்டு முதல் பல்வேறு பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் முறைகேடான நியமனங்களை கண்டறிந்து விரிவான அறிக்கையாக தாக்கல் செய்வதாகவும், முறைகேடுகளை கண்டறியும்பட்சத்தில் எதிர்காலத்தில் முறையாக நியமனம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பேராசிரியர் நியமனங்களைக் கண்காணிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறதே? என கேள்வி எழுப்பினார். மேலும் நீதிபதி குழுவின் சுதந்திரமான செயல்பாடுகள் தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்க பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 30 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதேசமயம், சட்டக் கல்வி மேம்பாடு தொடர்பாக நல்ல ஆலோசனைகளை மனுதாரர் மற்றும் அரசு தரப்பில் வழங்கலாம் எனவும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT