கஜா புயலால் 45 பேர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது: முதல்வர் பழனிசாமி அறிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டார். 
கஜா புயலால் 45 பேர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது: முதல்வர் பழனிசாமி அறிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டதாவது:

புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை சீர்செய்ய மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

கஜா புயலில் 1,70,454 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மரங்கள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்படுகின்றன. 347 மின் மாற்றிகள், 39,938 மின் கம்பங்கள், 3,559 கி.மீ நீள மின் வடங்கள் புயலால் பாதிப்படைந்துள்ளன. இவை அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும். இதற்காக 12,532 மின் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கஜா புயலுக்கு முன்பே 2,49,083 பேர் மீட்கப்பட்டு 493 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. 

நோய் தொற்று பரவாமல் இருக்க 372 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,014 நடமாடும் மருத்துவ முகாம்களும் செயல்பட்டு வருகின்றன. தேவையான மருத்துவப் பொருட்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. 84,436 பேருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த புயல் பாதிப்பில் 45 பேர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. 45 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 25,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கஜா புயலால் 102 மாடுகளும், 633 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூ.30,000 மற்றும் ஆடு ஒன்றுக்கு ரூ. 3,000 இழப்பீடு வழங்கப்படும். 

புயல் காரணமாக 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும், 30,404 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும் 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்தன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கும் உரிய நிவாரண உதவி வழங்கப்படும். பயிர்சேத கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்கப்படும் என்றிருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com