கஜா புயல்: இறந்த வன விலங்குகள், விழுந்த மரங்கள்...

கோடியக்கரையில் புயல் சீற்றத்தில் இறந்த 30-க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளிட்ட விலங்குகள் காரைக்கால் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை கரை ஒதுங்கின.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் எடுத்த படங்கள்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் எடுத்த படங்கள்.


காரைக்காலில் கரை ஒதுங்கிய மான்கள்
கோடியக்கரையில் புயல் சீற்றத்தில் இறந்த 30-க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளிட்ட விலங்குகள் காரைக்கால் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை கரை ஒதுங்கின.


கஜா புயல் காற்று வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் தொடங்கி ,வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடித்தது. புயலின் சீற்றம் பலமாக இருந்ததால், காரைக்கால் மாவட்டத்தில் கடலோரத்தில் நிறுத்தியிருந்த சிறிய படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் ஏராளமாக சாய்ந்தன. கஜா புயல் வியாழக்கிழமை நள்ளிரவு கரையை கடந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை முதல் காரைக்காலில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள், அவரவர் கிராமப்புற கரையில் பறவை, குதிரை, காட்டுப் பன்றி, நரி, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் இறந்து ஒதுங்கியிருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
காரைக்கால் வனத்துறையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் காரைக்கால்மேடு, கருக்களாச்சேரி முதல் பட்டினச்சேரி, வடக்கு வாஞ்சூர் பகுதி கடற்கரைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கண்ட வன விலங்குகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து காரைக்கால் பகுதியினர் பலரும் கடற்கரைக்குச் சென்று, இறந்த நிலையில் கரை ஒதுங்கிய வன விலங்குகளைப் பார்த்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் காட்டுப் பகுதியிலிருந்து வன விலங்குகள் சூறைக் காற்றில் கடலிலில் அடித்துச் செல்லப்பட்டு, இந்த பகுதியில் கரை ஒதுங்கியிருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
வாஞ்சூர் முதல் காளிக்குப்பம் வரையிலான காரைக்கால் மாவட்ட கடற்கரை எல்லையில் இதுபோன்று மேலும் பல காணப்படுகிறதா என்பதை பார்வையிட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மீனவர் கிராம கரைப் பகுதி மற்றும் கிராமங்கள் இல்லாத கடலோரப் பகுதியில் இதுபோன்று காணப்பட்டால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என அந்த துறையினர் தெரிவித்தனர்.
கால்நடைத்துறை இணை இயக்குநர் லதா மங்கேஷ்கர் தலைமையில் இத்துறையினர் கடலோரப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டு, அவற்றை கடலோரத்தில் புதைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து லதா மங்கேஷ்கர் கூறும்போது, காரைக்கால் மாவட்ட கடலோரப் பகுதியில் பறவை, குதிரை, நரி, காட்டுப் பன்றி, மான்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
கருக்களாச்சேரி கடலோரப் பகுதியில் மட்டும் 12 மான்கள், 1 பன்றி, 1 நரியும், பட்டினச்சேரி கடலோரப் பகுதியில் 24 மான்கள், 5 பன்றிகள், 1 குதிரையும் கரை ஒதுங்கியுள்ளன.
மான்கள் மட்டும் காரைக்கால் பகுதி கடலோரத்தில் 50 -க்கும் மேற்பட்டவை கரை ஒதுங்கிருக்க வாய்ப்புள்ளன. மற்ற கடலோர கிராமப் பகுதிகளுக்குச் சென்று பார்த்த பின்னரே எத்தனை வனவிலங்குகள் இறந்துள்ளன என்பதை துல்லியமாகத் தெரிவிக்க முடியும். அவற்றை அந்தந்தப் பகுதியிலேயே உடற்கூறு ஆய்வு செய்து புதைத்து வருகிறோம் என்றார்.
கடலோர மக்கள் தரப்பில் கூறும்போது, மாவட்டத்தின் கடலோரத்தில் 50-க்கும் மேற்பட்ட மான்கள், 50-க்கும் மேற்பட்ட பறவைகள், 10 -க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள், நரி, குதிரைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கரை ஒதுங்கியுள்ளன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com