குட்கா விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம்:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

குட்கா விசாரணையைப் பெயரளவுக்கு மேற்கொண்டால் உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
குட்கா விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம்:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


குட்கா விசாரணையைப் பெயரளவுக்கு மேற்கொண்டால் உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சிபிஐ இயக்குநர் நள்ளிரவில் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை சிபிஐ பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், குட்கா வழக்கில் ஒரு முதற்கட்ட குற்றப்பத்திரிகையை அவசர அவசரமாகத் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
மத்திய அரசுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வரி இழப்பு ஏற்படுத்தி, ரூ.40 கோடிக்கு மேல் பணம் பெற்றதற்கான குட்கா டைரி கைப்பற்றப்பட்ட வழக்கில், 40 இடங்களுக்கும் மேல் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியது. 
அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்படியொரு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள முதற்கட்ட குற்றப்பத்திரிகையில் கீழ்மட்ட அதிகாரிகளும், குட்கா கம்பெனியைச் சேர்ந்தவர்களும் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ஊழலின் பிதாமகன்களாகத் திகழ்ந்த உயர் பதவியில் இருப்பவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. இதன் மூலம் விசாரணை திசை மாறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, குட்கா வழக்கு விசாரணை நியாயமான முறையில் சட்ட ரீதியாக நடைபெற வேண்டும். டைரியில் இடம்பெற்றுள்ளவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமில்லாமல் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சிபிஐ பொறுப்பு இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறேன். 
அதற்கு மாறாக உள்நோக்கத்தோடும் பெயரளவுக்கும் நடைபெற்றால் சுதந்திரமான, எந்தவித அரசியல் அழுத்தத்துக்கும் ஆட்படாத விசாரணை கோரி திமுக சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக நேரிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com