புயல் பாதிப்பு: முதல்வர் இன்று நேரில் ஆய்வு: போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்

தமிழகத்தில் கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஐந்து அமைச்சர்கள் தலைமையில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்
நாகை மாவட்டம், கோவில்பத்து பகுதியில் இடிபாடுகளை அகற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபடுத்தப்பட்ட ஜேசிபி.
நாகை மாவட்டம், கோவில்பத்து பகுதியில் இடிபாடுகளை அகற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபடுத்தப்பட்ட ஜேசிபி.


தமிழகத்தில் கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஐந்து அமைச்சர்கள் தலைமையில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். புயல் பாதித்த பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை (இன்று) பார்வையிட்டு ஆய்வு செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார். புயலின் சீற்றம் தாங்காமல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளதாகவும் 30 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சேலம் மாவட்டம், வனவாசியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: 
தமிழகத்தில் கஜா புயலின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று முன்கூட்டியே தகவல் கிடைத்ததன் மூலம் மாநில பேரிடர் நிர்வாகம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. புயல் தாக்கும் அபாயம் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 82,000 பேர் 471 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இதன் பலனாக சேதங்களும் பாதிப்புகளும் குறைந்துள்ளன. கஜா புயலுக்கு இதுவரை 20 ஆண்கள், 11 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 
தற்போதுவரை 1,77,500 பேர் 351 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு செய்து வருகிறது. புயலால் பாதித்த மாவட்டங்களில் உணவுத் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. புயலின் பாதிப்புகளை முன்கூட்டியே கணக்கிட்டு பால் மற்றும் பால் பவுடர் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 203 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1,30,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
1.27 லட்சம் மரங்கள்: கஜா புயலுக்கு இதுவரை ஆடு, மாடு உள்ளிட்ட 1831 கால்நடைகள் பலியாகியுள்ளன. சுமார் 1,27,000 மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
புயல் தாக்கிய பகுதிகளில் 30,000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன அல்லது பகுதியாக சேதமடைந்துள்ளன. இதேபோல சுமார் 105 துணை மின்நிலையங்களும் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்கும் பணியில் 10,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடலோர மாவட்டங்களில் 26 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் 10 திட்டங்கள் சரி செய்யப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஐந்துபேர் கொண்ட அமைச்சர்கள் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நான் நேரில் சென்று புயலால் பாதிக்கப்பட் ட பகுதிகளைப் பார்வையிடுகிறேன் என்றார் அவர்.
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கடற்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் சென்னையிலிருந்து 2 கப்பல்கள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ளன என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டுள்ளார். புயலால் பாதித்த நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். விவசாயிகளும் மீனவர்களும் புயலால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் எஸ்.ராமதாஸ், வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்), மன்னார்குடி (திருவாரூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து அங்கு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கஜா புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் எடுத்த படம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com