வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

தெற்கு அந்தமானில் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஞாயிற்றுக்கிழமை உருவாகியுள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை


தெற்கு அந்தமானில் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஞாயிற்றுக்கிழமை உருவாகியுள்ளது. 
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது:
மலாய் தீபகற்பம் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி வெள்ளிக்கிழமை காணப்பட்டது. இது சனிக்கிழமை தெற்கு அந்தமான் பகுதி வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சியாக நிலவுகிறது. இது வலுவடைந்து, தெற்கு அந்தமானின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக ஞாயிற்றுக்கிழமை உருவாகியுள்ளது.
இதனால், திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் (நவ.19, 20) மேற்குத் திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் திங்கள்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து உள்மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமையும் (நவ.20), புதன்கிழமையும் (நவ.21) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றார் பாலச்சந்திரன்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென்கிழக்கு அரபிக்கடலுக்கு ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமையும் (நவ.18, 19 ), தென்மேற்கு அரபிக்கடலுக்கு திங்கள்கிழமையும் (நவ.19), செவ்வாய்க்கிழமையும் (நவ.20) மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 
மீண்டும் வலுவடைந்தது கஜா: தமிழகத்தில் 6 மாவட்டங்களை வெள்ளிக்கிழமை அதிகாலை சூறையாடிய கஜா புயல் வலுவிழந்து, தமிழக உள் மாவட்டங்கள் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்தது. அதைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்தடுத்து வலுவிழந்து கேரள பகுதியில் நிலைகொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து, அரபிக்கடலை சென்றடைந்தது.
இந்நிலையில், அது சனிக்கிழமை பகலில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உள்ள லட்சத்தீவுகளையொட்டிய பகுதியில் மீண்டும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்தது. இது மீண்டும் புயலாக வலுப்பெற்று, மேற்கு நோக்கி நகரவுள்ளது. இதனால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com