விரைவில் விண்வெளி சார்ந்து புதிய தொழில் கொள்கை

விண்வெளி சார்ந்து புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர்
 திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசுகிறார் அமைச்சர் எம்.சி. சம்பத்,
 திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசுகிறார் அமைச்சர் எம்.சி. சம்பத்,


விண்வெளி சார்ந்து புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ), தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு-2019 குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை திருச்சியில் சனிக்கிழமை நடத்தின. 
இக் கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது: 
இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. தொழில் மையமாக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் 3-ஆவது இடத்தையும், தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. 
பாதுகாப்புத் துறை சார்ந்த தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்காக சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஒசூர் ஆகிய நகரங்களை ஒருங்கிணைந்து தொழில் கூட்டமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தவுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் விண்வெளி சார்ந்து புதிய தொழில் கொள்கையை உருவாக்கவுள்ளது. இதற்கு அச்சாரமாக ஒரகடத்தை அடுத்த வல்லம் - வடகால் சிப்காட் பகுதியில், ரூ. 198 கோடி மதிப்பீட்டில் வானூர்தி உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்பூங்காவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அடிக்கல் நாட்டினார். இந்த பூங்காவில் 9 தொழில் நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கீட்டுக்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் சிப்காட் மற்றும் டிட்கோ நிறுவனத்தின் சார்பில், 245 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த பூங்கா வளாகத்தில் முதல்கட்டமாக அமைய உள்ள வானூர்தி உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் 50 நிறுவனங்கள் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளன. இவற்றில் 20 நிறுவனங்கள் தங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளன. இதில் 9 நிறுவனங்கள் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ளன. அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் ரூ. 3,000 கோடி முதலீட்டில் பூங்கா விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 25 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்த பூங்காவில் விமான உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, விமானங்கள் பழுது பார்க்கும் வசதி வாய்ப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கென புதிய தொழில் கொள்கையை தமிழக அரசு விரைவில் வெளியிடவுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா. பெஞ்சமின், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் கே. ஞானதேசிகன், சிஐஐ தமிழகத் தலைவர் எம். பொன்னுசாமி, தென்மண்டல துணைத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, தமிழக துணைத் தலைவர் எஸ். சந்திரமோகன், தொழில்வழிகாட்டி நிறுவன துணைத் தலைவர் எம். வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர்.
திருச்சிக்கு தனி அடையாளம்
கருத்தரங்கில் பேசிய அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் பேசுகையில், தமிழகத்தின் மையப் பகுதியாக திருச்சி விளங்குகிறது. காரைக்காலில் துறைமுகம், திருச்சியில் பன்னாட்டு விமானநிலையம் விரிவாக்கம், அனைத்து மாநிலங்களுக்குமான சாலைப் போக்குவரத்து, திறன் வாய்ந்த மனிதவளம் உள்ளதால் திருச்சியை முன்னிலைப்படுத்த வேண்டும் சிறு, குறுந்தொழில்கள் சங்கம், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற்றும் தொழில்முனைவோர் இணைந்து இதற்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com