செயலற்றுப்போன அரசு விதைப் பண்ணை

கடலூர் மாவட்டத்தில் அரசு விதைப் பண்ணை செயலற்றுப் போனதால் நெல் விளைந்த 90 ஏக்கர் நிலம் முள்காடாக மாறியுள்ளது.
செயலற்றுப்போன அரசு விதைப் பண்ணை

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அரசு விதைப் பண்ணை செயலற்றுப் போனதால் நெல் விளைந்த 90 ஏக்கர் நிலம் முள்காடாக மாறியுள்ளது.

பசுமைப் புரட்சி திட்டம் செயல்படுத்தப்படும் கால கட்டத்தில், வீரிய ரக நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டியது மிக முக்கியமான ஒரு பணியாக இருந்தது. இதற்காக, மண் வளம் கொண்ட இடங்களைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, இன்றைய கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரமாக, கடலூர் அருகே அமைந்துள்ள வெள்ளப்பாக்கத்தை தேர்வு செய்தது. 

அந்த இடத்தில் அரசு விதைப் பண்ணை அமைத்திட முடிவெடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 89.85 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, 1963-ஆம் ஆண்டு அரசு விதைப் பண்ணை தொடங்கப்பட்டது.

அக்கால கட்டத்தில், தங்களது பகுதியில் அரசுத் திட்டம் வருவதை வரவேற்கும் விதமாக, விவசாயிகளும் தங்களது இடங்களை மனமுவந்து அளித்தனர். விதை நெல்லை சேமித்து வைப்பதற்கு சேமிப்புக் கிடங்கு, நெல்லை உலர வைப்பதற்கு உலர் களம், அலுவலகம் ஆகியவையும் வெள்ளப்பாக்கத்தில் கட்டப்பட்டன.

இந்த விதைப் பண்ணையில் பல்வேறு ரக நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விதைப் பண்ணை அமைக்கப்பட்டதன் காரணமாக, உள்ளூர் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பும், வீரிய நெல் விதைகளும் கிடைத்து வந்ததால் விவசாயிகளிடம் அரசு விதைப் பண்ணை பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது.

சுமார் 20 ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்ட இந்த விதைப் பண்ணை 1983-ஆம் ஆண்டில் திடீரென மூடப்பட்டது. இதனால், இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 89.85 ஏக்கர் விளை நிலம் பராமரிப்பற்று, சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த காடாகக் காட்சியளிக்கிறது. விதைப் பண்ணை அலுவலகம், சேமிப்புக் கிடங்கு, உலர் களம் ஆகியவை சிதைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.
பயன்பாடும் பராமரிப்பும் இல்லாத அரசு நிலம் என்பதால் அருகிலிருந்தவர்கள் சில ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துப் பயிர் செய்யத் தொடங்கினர். மேலும், அருகில் உருவாகிய குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களும் விதைப் பண்ணை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். 

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ரா.ரமேஷ் கூறியதாவது: 

எனது தாத்தாவின் 4 ஏக்கர் நிலத்தை அரசு விதைப் பண்ணைக்காக வழங்கினோம். தற்போது அருகிலுள்ள பகுதியில் எங்களுக்கு சொந்தமான நிலத்தில் நாங்கள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறோம். உறுதியாக இரண்டு போகம் விளைந்து வந்த பூமி தற்போது முள் காடாக இருப்பதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. 

கையகப்படுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் அரசு விதைப் பண்ணை செயல்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு பல முறை கொண்டு சென்றும் உரிய தீர்வு காணப்படவில்லை. சில மனுக்களுக்கு வழங்கப்பட்ட பதிலில் இந்த இடம் வேளாண்மைத் துறையிடமிருந்து அரசின் வருவாய்த் துறைக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கின்றனர். 

தற்போது இந்த இடத்தில் காவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் உணவுத் தட்டுப்பாட்டை போக்கிட விளை நிலத்தை விளை நிலங்களாகவே பாதுகாக்க வேண்டும். எனவே, மீண்டும் அரசு விதைப் பண்ணையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லையெனில், வேளாண்மை மேற்கொள்வதற்காக விவசாயிகளிடமே நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 

கையில், வெள்ளப்பாக்கம் அரசு விதைப் பண்ணைக்காக 1963-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட 89.85 ஏக்கர் நிலமும் 2001-ஆம் ஆண்டில் வருவாய்த் துறைக்கு ஒப்படைக்கப்பட்டு, அரசு ஆணையிடப்பட்ட தகவல் மட்டுமே பதிவாகியுள்ளது. மற்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை என்றனர். 

தற்போதைய சூழலிலும் இருபோகம் விளையக் கூடிய வகையில் நீர் வளம் கொண்ட இந்தப் பண்ணை நிலப் பகுதியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், உணவு தன்னிறைவில் கூடுதலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். எனவே, இது தொடர்பாக, தேவைப்படும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com