புயல் நிவாரணப் பணிகள்: குறைகளை அரசு களைய வேண்டும்: ராமதாஸ்

"கஜா' புயல் நிவாரணப் பணிகளில் உள்ள குறைகளை அரசு களைய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

"கஜா' புயல் நிவாரணப் பணிகளில் உள்ள குறைகளை அரசு களைய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பிற பகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளும் கஜா புயலால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. இத்தகைய சூழலில் அரசு செய்ய வேண்டிய முதன்மையானப் பணி மக்களுக்கு ஆறுதல் கூறி, உணவு மற்றும் குடிநீர் தடையின்றி கிடைக்கச் செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதுதான்.

ஆனால், மக்களிடையே நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது. கஜா புயல் தாக்கி ஞாயிற்றுக்கிழமையுடன் 3 நாள்களாகும் நிலையில், பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தடையின்றி உணவு வழங்குவதைக் கூட ஆட்சியாளர்களால் உறுதி செய்ய முடியவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினரும், அப்பணிகளை மேற்பார்வையிட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் ஊரகப் பகுதிகளைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை என்பது தான் மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. 

முதன்மைச் சாலைகளில் போக்குவரத்து  சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப் பகுதிகளை இன்னும் அணுக முடியவில்லை. மின் வினியோகத்தை சீரமைக்கும் பணிகளில் எந்தவித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. 

"கஜா' புயலின் தாக்கமும், பாதிப்பும் மிகவும் அதிகம் என்றாலும்கூட, பாதிக்கப்பட்ட பரப்பளவு ஒப்பீட்டளவில் குறைவுதான் என்பதால், திட்டமிட்டு செய்தால் நிவாரணப் பணிகளை விரைவாகவும், எளிதாகவும் நிறைவேற்ற முடியும். 

ஆனால், திட்டமிடல் மற்றும் கூடுதல் பணியாளர்களை ஒதுக்குவதில் தமிழக அரசு தோற்றுவிட்டது. எனவே, நிவாரணப் பணிகளில் உள்ள குறைகளை களைய அரசு முயல வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com