ஒரத்தநாடு அருகே அமைச்சர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள்-அதிகாரிகள் பார்வையிடாததைக் கண்டித்து அமைச்சர்களின் கார்களை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில்
ஒரத்தநாடு அருகே அமைச்சர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள்-அதிகாரிகள் பார்வையிடாததைக் கண்டித்து அமைச்சர்களின் கார்களை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரத்தநாடு வட்டம்,  திருமங்கலக்கோட்டை கீழையூர்,  திருமங்கலக்கோட்டை மேலையூர்,  தெண்டராம்பட்டு, குருமன் தெரு ஆகிய பகுதிகளில் கஜா புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தவிர, பல ஆயிரம் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன. ஆனால்,

சேதங்களை பார்வையிட இதுவரை அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் வரவில்லை எனக்கூறி, பொதுமக்கள் பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலை குருமன் தெருவில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
காவல் அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து செல்ல முயன்றனர்.

அப்போது,  புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதிகளை பார்வையிட அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன்,  இரா. துரைக்கண்ணு,  கடம்பூர் ராஜூ, எம்.பி.க்கள் கு. பரசுராமன், ஆர். வைத்திலிங்கம், ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆகியோர் அந்த வழியாக வந்தனர். 

இதையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு புயலால் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதிகளைப் பார்வையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கவே, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதன் பின்னர்,  புயல் பாதித்த இடங்களை விரைவில் பார்வையிடுகிறோம் என அமைச்சர்கள் கூறியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com