கேரள எதிர்க்கட்சிகளிடம் இருந்தது தமிழக எதிர்க்கட்சிகளிடம் இல்லை: முதல்வர் புகார்

கேரளாவில் இருக்கும் எதிர்க்கட்சிகளிடம் இருந்த ஒற்றுமை உணர்வு தமிழக எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்று முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள எதிர்க்கட்சிகளிடம் இருந்தது தமிழக எதிர்க்கட்சிகளிடம் இல்லை: முதல்வர் புகார்


பட்டுக்கோட்டை: கேரளாவில் இருக்கும் எதிர்க்கட்சிகளிடம் இருந்த ஒற்றுமை உணர்வு தமிழக எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்று முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் புயல் பாதித்த நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சேத பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் வரவேற்றது, இப்பொழுது குறை சொல்கிறார்களே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, இது இயற்கைச் சீற்றம். இதேபோல கேரளாவில் வந்தபோது நிவாரணப் பணிகளெல்லாம் முடிவதற்கு கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகியது. அங்கே, எந்த எதிர்க்கட்சிகளும் எந்தவித பிரச்னையையும் எழுப்பவில்லை. அனைவரும் ஒன்றாக இணைந்து, நம்முடைய மக்கள் பாதிப்பட்டிருக்கின்றார்கள், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யவேண்டும் என்ற மனப்பாங்கு அங்கே இருந்தது. 

இங்கே இருக்கும் எதிர்க்கட்சிகளிடம் அது இல்லை, நான் என்ன சொல்வது? இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, ஒவ்வொருவரும் தன் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் மட்டுமல்ல, அனைத்து மக்களுமே, நம்முடைய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களை காப்பாற்ற வேண்டும், துன்பமான இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவிகள் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று அனைத்துத் தரப்பு மக்களையும் கேட்டுக் கொள்கின்றேன்.

வித்தியாசம் பாராமல், கட்சி பாகுபாடு இல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டுமென்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். அதேபோல, இந்த நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வருகின்ற அதிகாரிகளுக்கும்,

ஊழியர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அப்பொழுதுதான், வேகமாக, துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அதில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால், அந்தப் பணியில் சுணக்கம் ஏற்படும். ஆகவே, பொதுமக்களும், அங்கு பணிசெய்கின்ற அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஊடகங்களின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com