சட்டவிரோத நிலை ஆணையை திரும்பப் பெற வேண்டும்: கிரண் பேடி

சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட நிலை ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி திங்கள்கிழமை கடிதம் அனுப்பினார்.
சட்டவிரோத நிலை ஆணையை திரும்பப் பெற வேண்டும்: கிரண் பேடி

சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட நிலை ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி திங்கள்கிழமை கடிதம் அனுப்பினார்.
புதுவை அரசின் நிதித் துறைச் செயலர் கந்தவேலு, அரசுத் துறை உயர் அதிகாரிகளுக்கு அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையில் அரசின் மானிய நிதியை கையாளும் முழுஅதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உண்டு. ஆளுநரின் ஒப்புதலின்றி நிதியைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி, தனக்குத் தெரியாமல் நிதிச் செயலர் தன்னிச்சையாக வெளியிட்ட அந்த சுற்றறிக்கையை ரத்து செய்து சனிக்கிழமை நிலை ஆணை பிறப்பித்தார்.
இருப்பினும், இதை ஏற்க மறுத்த நிதிச் செயலர் கந்தவேலு, அரசு அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள குறிப்பாணையில், தான் ஏற்கெனவே வெளியிட்ட சுற்றறிக்கையின்படியும், மத்திய பொது நிதி சட்ட விதிமுறைகளின்படியும் அரசு மானிய நிதியை கையாளும் முழு அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உண்டு என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
நிதிச் செயலரின் குறிப்பாணைக்கு ஆதரவாக ஆளுநர் கிரண் பேடியும் சமூக ஊடங்களில் ஞாயிற்றுக்கிழமை கருத்து பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமிக்கு, ஆளுநர் கிரண் பேடியும் குறிப்பாணையுடன் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் பொது நிதிச் சட்ட விதிகளுக்கு முரணாக நிதித் துறைச் செயலரின் சுற்றறிக்கையை நிறுத்தும் வகையில், புதுவை முதல்வரால் சனிக்கிழமை இரண்டு நிலை ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. புதுவை அரசின் அலுவல் விதி 7-இல், 2-ஆவது பிரிவு, விதி 7, மத்திய அரசின் நிதி ஒழுங்குமுறை நடவடிக்கைகள் ஆகியவற்றின்படி புதுவை அரசு அதிகாரிகள், புதுவை யூனியன் பிரதேசம் பயன்படுத்தும் நிதியைக் கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் மாநில நிர்வாகிக்கு (ஆளுநர்) வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை ஒழுங்குப்படுத்துவது, கட்டுப்படுத்துவதற்கான முழு அதிகாரமும் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொது நிதிச் சட்டம் 2017, விதி 26,  புதுவை யூனியன் பிரதேச சட்டம் 1963-ன்படி, ரசீது மற்றும் கட்டணம் விதிகளின்படி ஆளுநருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உரிய அதிகாரம் கொண்ட அமைப்பின் (நாடாளுமன்றம்) உத்தரவு இன்றி வெளியிடப்பட்ட நிலை ஆணையால் எந்தப் பயனும் இல்லை.
எனவே, புதுவை முதல்வர், புதுவை யூனியன் பிரதேச சட்ட விதிகளை ஆய்வு செய்து, அவர் வெளியிட்ட சட்டவிரோத நிலை ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com