தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் தண்டனை கைதிகள் 3 பேரும் விடுதலை

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுகவைச் சேர்ந்த  முனியப்பன்
விடுதலை செய்யப்பட்ட முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன். (கோப்புப்படம்)
விடுதலை செய்யப்பட்ட முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன். (கோப்புப்படம்)

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுகவைச் சேர்ந்த  முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோர் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். 
 எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் அடிப்படையில், ஆளுநர் ஒப்புதலைப் பெற்று இவர்கள் 3 பேரையும் விடுவித்து தமிழக சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டுள்ளார்.
பேருந்து எரிப்பு சம்பவம்: கடந்த 2000-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பிப்ரவரி 2-ஆம் தேதி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் தருமபுரிக்கு சுற்றுலா வந்திருந்தனர். 
தீர்ப்பு வெளியான அன்றைய தினம் கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தைப் பார்வையிட்டு, தருமபுரி வழியாக பாரதி புரத்துக்கும், இலக்கியம்பட்டிக்கும் இடையே நெடுஞ்சாலையில் சென்றபோது, ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர், அப்பேருந்தை வழிமறித்தனர். பேருந்தின் மீது தாக்குதல் நடத்தி, பெட்ரோல் பாட்டில்கள் வீசப்பட்டன. இதில், மாணவிகள் வந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. அப்போது, மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர். அந்தப் பேருந்தில் பயணம் செய்த மற்ற 44 மாணவிகள், 2 ஆசிரியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
 இவ்வழக்கில் அதிமுகவினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சேலம் விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது.
தூக்கு தண்டனை: வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார். போதிய ஆதாரம் இல்லாததால் இருவர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 28 பேர் மீது விசாரணை நடைபெற்றது. இதில், 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. அவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு, பிப்ரவரி 16-ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மாணவிகளை எரித்துக் கொன்றபோது, நெடுஞ்செழியன் தருமபுரி நகர அதிமுக செயலாளராகவும், மாது என்கிற ரவிச்சந்திரன் தருமபுரி எம்ஜிஆர் இளைஞரணி துணைத் தலைவராகவும், முனியப்பன் புளியம்பட்டி அதிமுக ஊராட்சித் தலைவராகவும் இருந்தனர்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரைத் தவிர மற்ற 25 பேருக்கும், தலா 7 ஆண்டு 3 மாதம் சிறை மற்றும் தலா ரூ. 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
 இந்தத் தீர்ப்பை எதிர்த்து 28 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 2007 டிசம்பர் 6-ஆம் தேதியும், உச்சநீதிமன்றம் 2010 ஆகஸ்ட் 30-ஆம் தேதியும் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தன. இதையடுத்து,  உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு, தூக்கு தண்டனைக்  கைதிகள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
ஆயுள் தண்டனையாக குறைப்பு: இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ரஞ்சன்  கோகோய், அருண் மிஸ்ரா, பிரபுல்லா சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2016 மார்ச் 11-ஆம் தேதி உத்தரவிட்டது. உணர்ச்சி  வசப்பட்டு செய்த தவறு என்பதால் தண்டனை குறைக்கப்பட்டதாகவும், 3 மாணவிகளும் கொல்லப்பட வேண்டும் என்ற  நோக்கத்தில் பேருந்தை எரிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர். 
3 பேரும் விடுதலை:  இதனிடையே, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து, ஆளுநரின் ஒப்புதல் பெற்று தமிழகம் முழுவதும் ஆயுள் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். 
 இதில், வேலூர் மத்திய சிறையில் இருந்து 12 கட்டங்களாக 147 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதேசமயம், தருமபுரி பேருந்து வழக்கின் கைதிகளான முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோரை விடுதலை செய்வது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தநிலையில், இவர்கள் 3 பேரும் திடீரென வேலூர் மத்திய சிறையிலிருந்து திங்கள்கிழமை மதியம் 12.25 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். 
முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலின் பேரில், தமிழக  சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு வேலூர் மத்திய சிறைக்கு கிடைக்கப் பெற்றதும் உடனடியாக 3 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். 
 எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் மத்திய சிறையில் இருந்து 15 பெண் கைதிகள் உள்பட 185 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு பட்டியல் அனுப்பப்பட்டிருந்தது. இதில், 12 கட்டங்களாக 147 கைதிகள் விடுவிக்கப்பட்டபோது, முன்கூட்டியே தகவல் தெரிவித்த நிலையில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு கைதிகளான முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோர் விடுவிக்கப்படுவது தொடர்பாக எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com