கோவை அரசு மருத்துவமனையில் சடலத்தை பூனை கடிக்கும் விடியோவால் பரபரப்பு

கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலைப் பூனை கடிக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் திங்கள்கிழமை பரவியதால்


கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலைப் பூனை கடிக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் திங்கள்கிழமை பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவ்வாறு எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை என மருத்துவமனை டீன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற 60 வயது மூதாட்டி உடல்நலக்குறைவால் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். 
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க முடியாமல் இருந்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். 
இதைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் சடலத்தைப் பிணவறைக்கு கொண்டுச் செல்லாமல் வார்டில் ஒரு பகுதியில் தரையில் போட்டுள்ளனர். மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் பெண்ணின் சடலம் சில மணி நேரம் அங்கேயே கிடந்துள்ளது. 
அப்போது, அந்த வார்டில் சுற்றித் திரிந்த பூனை தரையில் கிடந்த பெண்ணின் கால் கட்டை விரலைக் கடித்து இழுத்துள்ளது. இதனை அந்த வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் பார்த்து மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனாலும், மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். 
இதையடுத்து, அங்கிருந்தவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவசர அவசரமாக அப்பெண்ணின் உடலைப் பிணவறைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்லிடப்பேசியில் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
ஆதரவற்ற நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தற்போது, மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக நடைபெற்ற இச்சம்பவம் குறித்து வார்டில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாவது: பூனை கடித்ததாக கூறும் பெண் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு கால்களில் காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
அவரை ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் வார்டில் சேர்த்தார். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், அவர் திங்கள்கிழமை இரவு 9.45 மணியளவில் உயிரிழந்தார். நோயாளி பிரிவில் இருந்து அவரின் உடல் பிணவறைக்கு 10.30 மணிக்கு எடுத்து செல்லப்பட்டது.
பூனை அவரை கடிக்கவில்லை; சடலத்தின் அருகேதான் சென்றது. மருத்துவமனை வளாகத்தில் செல்லிடப்பேசி பயன்படுத்துவதால் வீண் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இறந்த பெண்ணின் உடலை பூனை கடித்தது என்பது முற்றிலும் தவறானது. மருத்துவமனையில் சுற்றித் திரியும் பூனை, நாய், எலிகளை பிடிக்க மாநகராட்சிக்கு நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com