புயல் நிவாரண நிதி: பிரதமரை நாளை சந்திக்கிறார் முதல்வர்

கஜா புயல் பாதிப்பு சேத விவரங்களை துல்லியமாகக் கணக்கிட்டு தேவையான நிதியைப் பெற பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்திக்கிறேன்.
பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.


கஜா புயல் பாதிப்பு சேத விவரங்களை துல்லியமாகக் கணக்கிட்டு தேவையான நிதியைப் பெற பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்திக்கிறேன். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட மீண்டும் வருவேன் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து
நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு புயல் பாதிப்புகளைப் பார்வையிட ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க்கிழமை சென்றார். ஆனால், மழை காரணமாக தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு பிற்பகலில் திரும்பினார். பிறகு, திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்துக்குச் சென்று சேதங்களைப் பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டது. பிறகு, பட்டுக்கோட்டைக்கு சென்று புயலால் முறிந்து விழுந்த தென்னை மரங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. 
அதன்பிறகு, ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று இறங்கும்போது பெய்த பலத்த மழையினால் அங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அதேபோல், நாகப்பட்டினத்துக்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால் திருச்சிக்கு திரும்பி வந்துவிட்டோம். 
புயல் முடிந்த அடுத்த நாளே சேத விவரங்களைக் கணக்கிட முடியாது. பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை, எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பாதிப்பு என அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்டு அதற்கேற்ப முதல்கட்ட பணிகளை முடுக்கிவிட்டபிறகுதான் அங்கு செல்ல முடியும். புயல் முடிந்த மறுநாள் அதிகாலையிலேயே அந்தந்த மாவட்டங்களில் பணிகளை தொடங்கிவிட்டனர்.
40 லட்சம் தென்னைகள்: மின்கம்பங்களை சீரமைக்க 13,300 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டதில் வாழைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதை காணமுடிந்தது. 40 லட்சம் தென்னை மரங்கள் ஒடிந்து விழுந்துள்ளன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. எந்த விவசாயியும் விடுபடாத வகையில் பாதிப்புகளை துல்லியமாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
பிரதமரை சந்தித்து நிதி பெற...: புயல் தருணங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசிடம் சேத மதிப்புக்கேற்ப நிதி கோருவது வழக்கம். அதன்படி, கஜா புயல் பாதிப்புக்கு நிதி பெறுவது குறித்து பிரதமர் நரேந்திரமோடியை வியாழக்கிழமை சந்தித்து பேசவுள்ளேன். 
எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவிட்டு செல்லலாம். இயற்கை சீற்றத்தை சீரமைப்பதில் உள்ள சிரமங்களை அறிய வேண்டும். 1 லட்சம் மின்கம்பங்களை மாற்ற வேண்டும். வயல் பகுதிகளில் ஒரு மின்கம்பத்தை கொண்டு சென்று நடுவதற்கு 16 பேர் தேவைப்படுகின்றனர். அப்போது, மின்சாரம் தாக்குவதும் உண்டு. தற்போதுகூட 2 பேர் காயமடைந்துள்ளனர். உயிரைப் பணையம் வைத்து மின்ஊழியர்கள் பணி செய்கின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புயல் பாதித்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பும் வரை பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.
மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்: முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறியது: புயல் வருவதற்கு முன்பே அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்புகள் குறைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை நகரைப் பொருத்தவரை 46 ஆயிரம் வீடுகளில் 26 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. புதன்கிழமை மாலைக்குள் எஞ்சியுள்ள வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவிடும். கிராமப்புறங்களைப் பொருத்தவரை 4 அல்லது 5 நாள்களுக்குள் சரி செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
கேரளத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு நீங்கிட ஏறத்தாழ ஒரு மாதம் ஆனது. அதேபோல, அங்கு எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள். இங்கு அப்படியல்ல. எதிர்க்கட்சியினர் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் கட்சிப் பாகுபாடின்றி உதவ வேண்டும் என்றார் அவர்.


தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண உதவிகள்
தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினார். 
புதுக்கோட்டையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பட்டுக்கோட்டைக்கு வந்த முதல்வர், சூரப்பள்ளம் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புக்குச் சென்று சாய்ந்து கிடந்த மரங்களை பார்வையிட்டார். அவரிடம், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி. சேகர் உள்ளிட்டோர் பாதிப்பு விவரங்களை எடுத்துக் கூறினர்.
பின்னர், புயலால் சுவர் இடிந்து இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், சேதமடைந்த கூரை வீடுகளின் பயனாளிகள் 5 பேருக்கு தலா 10,000 ரூபாயும் நிவாரணம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், உடுமலை கே. ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் வே. துரைமாணிக்கத்தை அழைத்து பாதிப்புகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். 
புதுக்கோட்டையில் ரூ. 51.34 லட்சம் நிவாரண உதவிகள்: முன்னதாக, புதுக்கோட்டை வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாப்பிள்ளையார்குளம், மச்சுவாடி ஆகிய பகுதிகளில் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து, புயலால் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் ரூ. 50 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார். மேலும், முழுமையாக சேதமடைந்த 4 வீடுகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம், பகுதி சேதமடைந்த 23 வீடுகளுக்கு தலா ரூ. 4,100 என மொத்தம் ரூ. 51.34 லட்சம் வழங்கப்பட்டது.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 30 பேருக்கு விலையில்லா சேலைகள், வேட்டிகள் மற்றும் தலா 10 கிலோ அரிசியை முதல்வர் வழங்கினார்.

சுற்றுப்பயணம் பாதியில் ரத்து
பட்டுக்கோட்டையில் பார்வையிட்ட பிறகு ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் திருவாரூர், நாகை மாவட்டத்துக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், பட்டுக்கோட்டை நிகழ்ச்சி முடிந்த 10 நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இதேபோல, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் மழை பெய்வதாகத் தகவல் கிடைத்தது. மழையிலும், மேக மூட்டத்திலும் ஹெலிகாப்டர் செல்வது சிரமம் என்பதால், முதல்வரின் திருவாரூர், நாகை பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பட்டுக்கோட்டையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் திருச்சிக்குச் சென்றார்.

மற்றொரு நாளில் வருவேன்!
மழையால் புயல் பாதிப்புகளை பார்வையிட முடியாத திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு மற்றொரு நாளில் சென்று சேத விவரங்களை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுவதா, தரைவழிப் பயணமா என்பது சூழலுக்கேற்ப முடிவு செய்யப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com