தமிழ்நாடு

சபரிமலையில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என்பதே கேரள அரசின் நோக்கம்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

DIN


மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பக்தர்களை துன்புறுத்துவதும், அவர்களை சபரிமலைக்கு அனுமதிக்க கூடாது என்பதும்தான் கேரள அரசின் நோக்கமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
முன்னதாக, மத்திய அமைச்சருக்கும், கேரள காவல்துறை உயரதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், அமைச்சரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கேரள ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா மீது மாநில பாஜக பொதுச்செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிட இருப்பதாகவும் அவர் கூறினார். 
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் தற்போது நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அங்கிருந்து கேரள அரசுப் பேருந்துகள் மூலமாக பம்பை வரையில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். 
இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சபரிமலையில் வழிபடுவதற்காக புதன்கிழமை நிலக்கல்லுக்கு வந்தார். அப்போது, அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். 
இதுகுறித்து காவல்துறையிடம் அவர் பேசியபோது, பக்தர்களை நீங்கள் தேவையின்றி துன்புறுத்துகிறீர்கள். பம்பை வரை கேரள அரசுப் பேருந்து மட்டும் அனுமதிக்கப்படுவது ஏன்? இது ஐயப்ப பக்தர்களுக்கு நல்லதல்ல. தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்.
அப்போது காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா இதுகுறித்து விளக்கம் அளித்தபோது, பம்பையில் இருந்த வாகன நிறுத்துமிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு வழியில்லை. அரசுப் பேருந்துகள் பக்தர்களை இறக்கி விட்டபின், மீண்டும் பக்தர்களை ஏற்றிக்கொண்டு உடனடியாக திரும்பி வந்துவிடும். ஆனால், தனியார் வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து நெரிசல் உருவாகி பக்தர்களுக்கு அசெளகரியம் ஏற்படும் என்று தெரிவித்தார். அதே சமயம், அமைச்சர் வேண்டுமானால் அவரது அரசு வாகனத்தில் செல்லலாம் என்றார் யதீஷ் சந்திரா.
ஆனால், தனது 6-ஆம் வயதில் இருந்து இதுவரை 30 முறை சபரிமலை வந்திருப்பதாகவும், தற்போது நிலவும் சூழலை வேறு எப்போதும் கண்டதில்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேரள அரசுப் பேருந்திலேயே பொன்.ராதாகிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றார். பின்னர் பம்பையில் இருந்து இருமுடி சுமந்து சென்ற அவர் ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT