தமிழ்நாடு

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கோயில்கள் இடிப்பு

DIN


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த 15 கோயில்களில் 6 பழைமையான கோயில்கள் முழுமையாகவும், 9 கோயில்களில் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (நவம்பர் 23) நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, கிரிவலப் பாதை முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை இணைந்து அகற்றி வருகின்றன.
6 கோயில்கள் முழுவதுமாக இடிப்பு: இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே இருந்த ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில், சண்முகா பள்ளி அருகே உள்ள வளைவில் இருந்த பழைமையான ஸ்ரீவெற்றி விநாயகர் கோயில், இதே பகுதியில் இருந்த பழைமையான ஆதிதிராவிடர் குளக்கரை விநாயகர் கோயில், கிரிவலப்பாதை கிருஷ்ணர் கோயில் எதிரே இருந்த மகா மாரியம்மன் கோயில், கிரிவலப் பாதையில் உதவும் கரங்கள் அமைப்பு அலுவலகம் எதிரே இருந்த பழைமையான அண்ணாமலையார் பாதம் மற்றும் நந்தி, பஞ்சமுக தரிசனம் காணும் இடம் அருகே இருந்த காட்டு வனதுர்க்கையம்மன் கோயில் ஆகியவை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
9 கோயில்கள் பாதியளவு இடிப்பு: இதேபோல, கிரிவலப் பாதையில் சிம்ம தீர்த்தம் எதிரே இருந்த ஆறுமுகசாமி கோயில், கட்டட மையம் எதிரே இருந்த பிரிங்கி மகரிஷி கோயில், எமலிங்கம் அருகே இருந்த பழைமையான சிவாலயம், சாந்திமலை அறக்கட்டளை அருகே இருந்த கிருஷ்ணர் கோயில், காஞ்சி சாலையில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் தவம் இருந்த ஊசிமலை கம்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்பட 9 கோயில்கள் பாதியளவு இடிக்கப்பட்டுள்ளன.
முழுவதுமாக இடிக்கப்பட்ட 6 கோயில்களில் உள்ள 2 கோயில்களில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது ஸ்ரீஅருணாசலேஸ்வரர் மண்டகப்படி பெற்றுச் செல்வது வழக்கம். மேலும், பல நூறு ஆண்டுகளாக வணங்கி வந்த கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இடையூறாக இருந்ததால் இடித்தோம்: இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கூறியதாவது: அவசர ஊர்திகள், வாகனங்கள் செல்ல இடையூறாக இருந்ததால், கோயில்களை இடித்துள்ளோம். மாவட்டம் முழுவதும் இதேபோல போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் இடிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT