தொலைநிலை படிப்பு வழிகாட்டுதலை மீறினால் ஒட்டுமொத்த அங்கீகாரமும் ரத்து: யுஜிசி எச்சரிக்கை

உயர் கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளுக்கான வழிகாட்டுதல்களை மீறினால், அந்தக் கல்வி நிறுவனத்தின் ஒட்டுமொத்த படிப்புகளுக்கான அங்கீகாரமும்
தொலைநிலை படிப்பு வழிகாட்டுதலை மீறினால் ஒட்டுமொத்த அங்கீகாரமும் ரத்து: யுஜிசி எச்சரிக்கை


உயர் கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளுக்கான வழிகாட்டுதல்களை மீறினால், அந்தக் கல்வி நிறுவனத்தின் ஒட்டுமொத்த படிப்புகளுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது. 
இதுதொடர்பாக யுஜிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஆய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க நீதிபதி ரெட்டி தலைமையில் குழு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. 
இந்தக் குழு தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு, நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் தொலைநிலை மற்றும் திறந்தநிலை உயர் கல்வியின் தரத்தை உயர்த்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
எனவே, நீதிபதி ரெட்டி குழுவின் பரிந்துரைகளை நாடு முழுவதும் தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவது கட்டாயமாகும். 
அதன்படி, நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளின் பட்டியல், கல்வி நிறுவனம் வாரியாக யுஜிசி-யின்www.ugc.ac.in/deb என்ற இணையதளத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும்.
இந்தப் பட்டியலில் இல்லாத படிப்புகள் வழங்கப்பட்டால், அந்தப் படிப்பு அங்கீகாரம் இல்லாத படிப்பாகக் கருதப்படும். அவ்வாறு அங்கீகாரம் இல்லாத படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், எந்தவொரு பயன்களையோ அல்லது சலுகைகளையோ பெற முடியாது. எந்தவொரு சூழ்நிலையிலும், ஏற்கெனவே தொடங்கி நடத்தப்பட்டு வரும் படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் வழங்காது.
மேலும், தொலைநிலை மற்றும் திறந்த நிலைப் படிப்புகளை வழங்கி வரும் உயர் கல்வி நிறுவனங்கள் யுஜிசி-யின் தொலைநிலைப் படிப்புகளுக்கான 2017 வழிகாட்டுதலையும், அவ்வப்போது வெளியிடப்படும் சட்டத் திருத்தங்களையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றாத கல்வி நிறுவனத்தின் தொலைநிலைப் படிப்புகளுக்கான அங்கீகாரம் மட்டுமின்றி, அந்தக் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் மற்ற முறையான படிப்புகளுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com