கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஓவியங்கள் காக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அழியும் நிலையில் உள்ள நாயக்கர் கால ஓவியங்களைக் காக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
உள்பிரகாரத்தில் அழியும் நிலையில் உள்ள நாயக்கர் கால ஓவியம். (வலது) ஓவியும் முழுவதும் அழிந்துபோன கோபுர மதில் சுவர்.
உள்பிரகாரத்தில் அழியும் நிலையில் உள்ள நாயக்கர் கால ஓவியம். (வலது) ஓவியும் முழுவதும் அழிந்துபோன கோபுர மதில் சுவர்.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அழியும் நிலையில் உள்ள நாயக்கர் கால ஓவியங்களைக் காக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

தஞ்சை பெரியகோயிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரச் சோழன், கி.பி. 1019 ஆம் ஆண்டில்  பெற்ற கங்கை வெற்றியைக் கொண்டாடும் வகையில் கி.பி 1023 ஆம் ஆண்டு ஜயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி, தன்னுடைய ஆட்சியை அங்கிருந்தவாறு நிர்வகித்தார். அங்கு தனது தந்தை தஞ்சையில் கட்டியதைவிட பெரியதாக அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயிலையும் கட்டினார்.

எட்டு பக்கங்களோடு நளினத்தோடு அமைக்கப்பட்ட விமானம், கிழக்கு நுழைவு வாயிலில் பெரிய நந்தி பகவான், பிரம்மாண்ட மூலமூர்த்திகள், இருபுறமும் கருங்கல் துவார பாலகர்கள், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் வானசாஸ்திர முறைப்படி வெகு அழகாகச் செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள், 60 அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம், இங்குள்ள அம்மன் பெரியநாயகிக்கு, பெயருக்கேற்ப பெரிய உருவத்தில் சிலை. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் சோழர் காலக் கட்டடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் உள்ளது.

இதை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து பராமரித்து வருகிறது. இதனால்  வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோயிலையும், இங்குள்ள நாயக்கர் கால ஓவியங்களையும் கண்டு அதிசயிக்கின்றனர்.

இதனால் அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கங்கைகொண்ட சோழபுரம் விளங்குகிறது. 

இந்நிலையில் இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து 2 ஆண்டுகளே நிறைவடையவுள்ள நிலையில் இங்குள்ள ஏராளமான ஓவியங்கள் அழிந்து வருகின்றன.

கோயில் மதில்சுவர் மற்றும் உட்பிராகாரம், அம்மன் சன்னதிகளில் சில நாயக்கர் கால ஓவியங்கள் அனைத்தும் அழியும் நிலையில் உள்ளன.  சில ஓவியங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. தொல்லியல் துறையின்  முறையான பராமரிப்பின்மையே இதற்குக் காரணம் என சுற்றுலாப் பயணிகளும்,பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.  

எனவே இக்கோயில் பாதுகாப்பு சின்னங்கள் மீது தொல்லியல் துறை சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com