அதிமுக 47-ஆம் ஆண்டு தொடக்க விழா: தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக 47-ஆம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை
தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு மாலை அணிவித்த கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு மாலை அணிவித்த கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்


சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக 47-ஆம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த கட்சியினரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியும் அளிக்கப்பட்டது.
அதிமுக 47-ஆவது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், கட்சியின் பல்வேறு துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
மாலை அணிவிப்பு-இனிப்புகள்: கட்சித் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி கே.பழனிசாமியும் மாலை அணிவித்து வணங்கி சிலைகளின் காலை தொட்டுக் கும்பிட்டனர். அதன் பிறகு கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர்.
ரத்த தானத்துக்கு புதிய செயலி: ரத்த தானம் செய்வதற்காக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் உருவாக்கப்பட்ட ரத்தத்தின் ரத்தமே என்ற செயலியும் புதன்கிழமை தொடங்கப்பட்டது. 
ரத்தமளிக்க விரும்புபவர்கள் உலகில் எங்கிருந்தாலும் தங்களது பெயர், ரத்தப் பிரிவு, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் அவசரமாக ரத்ததானம் பெற விரும்புவோர், நாட்டின் எந்த இடத்தில் இருந்தாலும், முதலில் தங்களது பெயர், தேவைப்படும் ரத்தப்பிரிவு, முதலியவற்றை இதே செயலியில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பதிவு செய்த சில விநாடிகளில், ரத்தம் தேவைப்படுவோரின் முகவரிக்கு சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கும் ரத்தக் கொடையாளிகளுக்கு விவரம் சென்றடையும். ரத்தமளிபோரின் தொலைபேசி எண், அவரது இருப்பிடம் உள்ளிட்ட விவரமும், ரத்தம் தேவைப்படுபவருக்கு சென்றடையும்.
ரத்தம் தேவைப்படுபவர்கள், தங்கள் இருப்பிடம் அல்லது நோயாளி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ரத்த கொடையாளிகளுடன் உடனடியாக செல்லிடப்பேசியில் பேசி, சூழலுக்கு ஏற்றாற்போல் ஒருவரிடமோ அல்லது பலரிடமோ ரத்தத்தை தானமாகப் பெறமுடியும்.
இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், சரோஜா, பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com