தம்மை கொல்ல ரா திட்டமிட்டதாக சிறீசேனா கூறவில்லை: இலங்கை அரசு மறுப்பு

இந்திய உளவுத் துறையான ரா அமைப்பு தம்மை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா குற்றம்சாட்டியதாக ஊடகங்களில் வெளியான
தம்மை கொல்ல ரா திட்டமிட்டதாக சிறீசேனா கூறவில்லை: இலங்கை அரசு மறுப்பு


இந்திய உளவுத் துறையான ரா அமைப்பு தம்மை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா குற்றம்சாட்டியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று இலங்கை அரசு மறுத்துள்ளது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, இந்தியாவில் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது அவர், தில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது இலங்கையில் இந்தியாவால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைவு படுத்தும்படி அவர் வலியுறுத்த முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய திட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க தாம் எதிர்ப்பு தெரிவித்ததால், ரா உளவு அமைப்பு தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருக்கிறது என்று சிறீசேனா கூறியதாக அந்நாட்டின் தி எக்கானமிநெக்ஸ்ட்.காம் இணையதளத்தில் செய்திகள் வெளியாகின. அமைச்சரவை வட்டாரத் தகவலை மேற்கோள்காட்டி, இந்த செய்தியை அந்த இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த செய்தியில், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபட்சவையும், தம்மையும் கொலை செய்ய ரா அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருப்பது குறித்து கூட்டணி கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கவலைப்படவில்லை என்று சிறீசேனா குற்றம்சாட்டியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னா, இந்த தகவலை மறுத்தார். இதுகுறித்து இலங்கை அமைச்சரவை செயலாளர் எஸ். அபிசிங்ஹே வெளியிட்ட அறிக்கையை வாசித்தார். அவர் கூறியதாவது:
கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் வெளியான செய்திகளை, அமைச்சரவை தலைவரான அதிபர் தனது கவனத்தில் எடுத்து கொண்டார். அந்த கூட்டத்தில் அப்படி பேசவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.
இலங்கையில் இந்திய அரசு, இந்திய நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பான அமைச்சரவை குறிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை.
அதேபோல் கொழும்பு கிழக்கு துறைமுக முனைய திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அதிபர் சிறீசேனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தத் திட்டம் குறித்து, பிரதமர் மோடியுடன் சிறீசேனா நேபாளத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது பேசியுள்ளார். அப்போது இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் செய்ய பிரதமர் மோடி ஒப்புக் கொண்டார் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com