செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

சம்பா பயிரைக் காப்பாற்ற டேங்கர் லாரியிலிருந்து தண்ணீர் ஊற்றும் அவலம்

By  திருத்துறைப்பூண்டி| DIN | Published: 08th September 2018 01:07 AM

நீரின்றி காயும் நிலையிலுள்ள சம்பா பயிரைக் காப்பாற்ற டேங்கர் லாரியில் விலைக்கு தண்ணீர் வாங்கி பயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
 தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயமே பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்து வந்தது. கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிமை நீரை வழங்க மறுத்த நிலையில் முப்போக சாகுபடி இருபோகமாகி, அதுவும் ஒரு போகமாகி பின்னர், அதுவும் கேள்விக் குறியாகிவிட்டது.
 தமிழக காவிரி உரிமை குறித்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயலாக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், இயற்கை கொடையாக அளித்த பருவ மழை நீரை கர்நாடகம் உபரிநீரை தமிழகத்துக்கு லட்சக்கணக்கான கன அடிநீர் திறந்தும் சேமிக்க வழியின்றி கடலில் கலந்தது. உபரி நீரை சேமிக்க பொதுப்பணித் துறையில் பல்வேறு பிரிவுகள் இருந்தும் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை.
 மேட்டூர் அணை நிரம்பியதால், நிகழாண்டு சம்பா சாகுபடி செய்து விடலாம் என்ற முழு நம்பிக்கையில் விவசாயிகள் சம்பா பணிகளை தொடங்கினர். ஆனால், காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்தும் பாசன பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் வரவில்லை என்பதும், சுமார் 170 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்த நிலையில், கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்பதும் வேதனையாக உள்ளது.
 இந்நிலையில், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டு வருகிறது. சம்பா பயிரை காப்பாற்ற செய்வதறியாமல் இருந்து வரும் விவசாயிகள் டேங்கர் லாரி மூலம் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயிரைக் காப்பாற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகளின் நிலையை அறிந்து தமிழக அரசு டெல்டா பகுதிக்கு தண்ணீர் கொடுத்து சம்பாவை பாதுகாக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.
 

More from the section

இதுபோன்ற முதல்வரைப் பெற மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? ராமதாஸ் சாடல்
நாகை, திருவாரூரில் வேறொரு நாளில் முதல்வர் ஆய்வு செய்வார்: ஜெயக்குமார்
மோசமான வானிலையால் முதல்வரின் புயல் பாதிப்பு ஆய்வு பயணம் பாதியிலேயே ரத்து
காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை: சென்னை வானிலை மையம்
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்குக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டது எப்படி? ஆளுநர் மாளிகை விளக்கம்