செவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018

வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்: நோய்த் தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கை தேவை! ராமதாஸ் வலியுறுத்தல்

DIN | Published: 11th September 2018 11:56 AM

எலிக்காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
கேரள எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நோயால் தாக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நோய் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கோவை மாவட்டம் கொண்டம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற 28 வயது ஓட்டுனர், திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த 50 வயது அங்கன்வாடி பணியாளர் காந்திமதி ஆகியோர் கடந்த சில நாட்களில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர மேலும் பலர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு எலிக்காய்ச்சலுக்கு மருத்துவம் பெற்று வருகின்றனர். மழை&வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு சென்று திரும்பியவர்களுக்கு தான் இந்த நோய்  ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கொண்டம்பட்டி சதீஷ்குமார் உயிரிழப்பதற்கு சில நாட்கள் முன்பாக கேரளாவிலுள்ள மனைவி இல்லத்திற்கு சென்று பல நாட்கள் தங்கியிருந்து விட்டு திரும்பியிருக்கிறார் என்பதால் அவருக்கு கேரளத்தில் நோய் தொற்றியிருக்கலாம் எனத் தெரிகிறது.

அதேநேரத்தில் அங்கன்வாடி பணியாளர் காந்திமதியோ, எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேறு பலருக்கோ கேரளத்துடன் எந்த தொடர்புமில்லை. ஆகவே, கேரளத்தைத் தவிர தமிழக மாவட்டங்களில் ஏதோ ஒரு ஆதாரத்திலிருந்தும் இந்த நோய் பரவுகிறது என்ற உண்மையை புறந்தள்ளி விடக்கூடாது. எலிக்காய்ச்சல் உயிர்க்கொல்லி நோய் அல்ல. சரியான நேரத்தில் நோய் கண்டறிப்பட்டால் எலிக்காய்ச்சலை மிகவும் எளிதாக குணப்படுத்தி விடலாம். எனவே, எலிக்காய்ச்சல் நோயைக் கண்டு மக்கள் எந்த வகையிலும் அச்சமடையத் தேவையில்லை.

எலிக்காய்ச்சல் நோய் எலி, பன்றிகள், பூனை போன்ற உயிரினங்களின் வயிற்றில் வளரும் லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியா மூலம் பரவும். தொடக்கத்தில் சாதாரணக் காய்ச்சலாகத் தான் இது தொடங்கும். பின்னர் கால்வலி, உடல்வலி ஆகியவற்றுடன் கண் எரிச்சலும் ஏற்படும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். வாந்தி, வயிற்றுபோக்கும் ஏற்படும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் உடல் உறுப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்து இறப்பு ஏற்படும். எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியமாக இல்லாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோயால் இருவர் உயிரிழந்ததற்கு காரணம் நோயின் கடுமை என்பதை விட, எலிக்காய்ச்சல் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமை என்பது தான் உண்மை. எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சாதாரணக் காய்ச்சல் என்று நினைத்து அலட்சியமாக இருந்தது தான் அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகு எலிக்காய்ச்சல் நோய் குறித்தும், நோய்த்தடுப்பு உத்திகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் மிகவும் வருத்தமளிக்கிறது.

விலங்குகளின் வயிற்றில் உருவாகும் லெப்டோஸ்பைரா பாக்டீரியா அவற்றில் கழிவுகளுடன் கலந்து வெளியேறும். இவை கலந்த கழிவுநீர், ஈரப்பதமான மண்தரை ஆகியவற்றில் மனிதர்கள் வெற்றுக் காலுடன் நடக்கும் போது, காலில் உள்ள துளைகள் மூலம் பாக்டீரியா மனித உடலுக்குள் சென்று எலிக்காய்ச்சலை உருவாக்கும். எனவே, தேங்கிக்கிடக்கும் தண்ணீர், விலங்குகளின் கழிவுகள் கலந்த நீர், ஈரப்பதமான தரை ஆகியவற்றில் செருப்பு அணியாமல் நடப்பதை தவிர்க்க வேண்டும். உணவுத் தூய்மையைக் கடைபிடிப்பது, குடிநீரைக் காய்ச்சிக் குடிப்பது ஆகியவை  மிகவும் அவசியமானதாகும்.

சென்னையில் கடந்த 2016&ஆம் ஆண்டு ஜூன் மாதம் எலிக்காய்ச்சலின் முற்றிய நிலை நோயால் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் இந்நோயை தமிழக சுகாதாரத்துறை மிகவும் அலட்சியமாக எதிர்கொள்கிறது. கழிவு நீர் மூலமாக லெப்டோஸ்பைரா  பாக்டீரியா பரவும் வாய்ப்பிருக்கிறது எனும் நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் குழாய்களை சீரமைப்பதாகக் கூறிக் கொண்டு கழிவு நீரை இறைப்பான் கொண்டு தெருக்களில் இறைத்து ஓட விடும் கொடுமை நடக்கிறது. குட்கா ஊழல்வாதிகளிடம் சுகாதாரத்துறையும், ஒப்பந்த ஊழல் பேர்வழிகளிடம் உள்ளாட்சித் துறையும் இருந்தால் இப்படித் தான் நடக்கும். மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தாலும், ஊழல் வருவாயில் குறியாக இருப்பவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

மக்களின் உயிர் விலைமதிப்பற்றது. ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அதை இழந்து விடக்கூடாது. எனவே, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எலிக்காய்ச்சல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் தாராளமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவற்றுக்கெல்லாம் மேலாக எலிக்காய்ச்சல் என்றால் என்ன? அதை எவ்வாறு தடுக்கலாம்? என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

Tags : leptospirosis Fast spreading leptospirosis ratfever ramdoss

More from the section

பொதுப்பணித்துறைக்கு பசுமைத் தீர்ப்பாயம் ரூ.2 கோடி அபராதம்: உயர் நீதிமன்றம் தடை
அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதா புதிய சிலை நாளை திறப்பு
பாஜக-வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைப்பு: மு.க.ஸ்டாலின், சீதாராம் யெச்சூரி சந்திப்பு
கூவம், அடையாறு ஆற்றை பராமரிக்காத தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்குத் தடை
நன்றாக பளு தூக்குபவர் என்ற அர்த்தத்தில் பலசாலி என்று கூறியிருப்பார்: ரஜினியை கிண்டல் செய்த வைகோ