செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

குட்கா ஊழல் வழக்கு: 2 காவல் அதிகாரிகளுக்கு சிபிஐ அழைப்பாணை

DIN | Published: 12th September 2018 04:28 AM


குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக விசாரணை செய்ய, சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட குட்கா, போதைப் பாக்குகள் விற்பனையை லஞ்சம் பெற்றுக் கொண்டு சில உயர் அதிகாரிகள் அனுமதித்தனர். 2016-இல் வருமானவரித் துறையினர் செங்குன்றத்தில் உள்ள ஒரு குட்கா கிடங்கில் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த டைரியில் அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஏப்ரல் முதல் சிபிஐ இவ்வழக்கை விசாரிக்கிறது. சம்பந்தப்பட்ட கிடங்குக்கு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். கிடங்கு உரிமையாளர்கள் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா உள்பட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 6-ஆம் தேதி கைது செய்தனர்.
5 பேரிடம் விசாரணை: கைது செய்யப்பட்ட மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட 5 பேரிடமும் நான்கு நாள்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததினால், அவர்களிடம் திங்கள்கிழமை இரவு முதல் தில்லி சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மத்திய கலால்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோரிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டு வருகின்றனர். விசாரணையில் 5 பேரும் அளிக்கும் பதிலை பொருத்து, வழக்கில் தொடர்புடைய காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கலால்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்ப சிபிஐ முடிவு செய்துள்ளது.
உதவி ஆணையருக்கு அழைப்பாணை: முன்பு புழல் காவல் உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்குமார் ஆகியோருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. தற்போது மன்னர் மன்னன், மதுரை ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளராகவும், சம்பத்குமார் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் மன்னர்மன்னன், சம்பத்குமார் ஆகியோரின் சென்னை வீடுகளில் சோதனை நடத்தி, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதில் சம்பத்குமாரின் ராயபுரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அழைப்பாணையின் அடிப்படையில், ஓரிரு நாள்களில் இருவரும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராவார்கள் என கூறப்படுகிறது.
 

More from the section

திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி: முதல்வர் பழனிசாமி தாக்கு
2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது: பள்ளிகல்வித்துறை இயக்குநர் திட்டவட்டம்
இனியும் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வகையில் பேசினால் கருணாஸ் பதவிக்கு ஆபத்து: அமைச்சர் ஜெயகுமார்
போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தது உறுதியாகிறது: மனோஜ் பாண்டியன்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை